Monday, December 10, 2007

ஒரு வருட கிராமப்புற சேவைக்கு எதிரான மருத்துவ மாணவர்களின் போராட்டம்....

மருத்துவ சேவை உலகில் ஒரு மிகப்பெரிய சேவையாக கருதப்படுகிறது. விலை மதிப்புமிகுந்த உயிரை காக்கும் மருத்துவம் மிக உயரிய தொழிலாக கருதப்படுவது மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு ஒரு பெருமையான விஷயம். ஆனால் மருத்துவ மாணவர்கள் தங்களின் போராட்ட உத்திகளால் அதை மக்கள் மிக வேதனையோடு கானக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். மாணவர்கள் மொட்டையடித்துக் கொண்டு(ஆண்கள் மட்டும்) சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நல்ல புத்தியை கொடு என கடவுளை வேண்டுவது. மருத்துவரை போன்ற ஒரு பொம்மையை தூக்கில் போட்டு ஒப்பாரி வைப்பது(பெண்கள் மட்டும்). மருத்துவ மாணவர் போன்ற பொம்மைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது இதெல்லாம் ஓர் ஆண்டு கிராமப்புற சேவையால் தங்கள் வாழ்வே முற்றுப்பெற்றுவிடும் என்பது போல் இருக்கிறது. இது மிகைப்படுத்துவதாக உள்ளது. தங்கள் பிரச்சனையை எடுத்து செல்ல எத்தனையோ வசதிகள் இருக்க வகுப்புகளை புறக்கனித்து வீதியில் இறங்கியிருப்பது அவசியமற்றதாக தெரிகிறது. அதோடு இந்த போலி கம்யூனிஸ்டுகள் இந்த போராட்டத்தை ஆதரிப்பதுதான் கோமாளித்தனமாக இருக்கிறது. உழைக்கும் வர்க்கம் தங்கள் ஊதியத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடுவதும் மாணவர்கள் செவை செய்ய மறுத்து வகுப்பை புறக்கனிப்பத் ஒரே தட்டில் நிறுத்து பார்க்கமுடியுமா? யார் வேலை நிறுத்தம் செய்தாலும் நாங்கள் ஆதரிப்போம் என்ற நிலை கண்மூடித்தனமான அரசியல் பார்வையாக உள்ளது. எந்த மாணவனும் சேவை செய்வதால் மக்கள் பிரச்சனைகளை புரிந்து இளைய சமுதாய்த்திற்கு பொறுப்பும் அக்கறையும் வருமே தவிர கெட்டுபோகமாட்டார்கள். இளைய சமுதாயத்தின் ஆக்கபூர்வமான பணி சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமையும். கம்யூனிஸ்டுகளின் மாணவர்களுக்கான ஆதரவுப் போக்கு SFI, DYFI போன்ற அமைப்புகளுக்கு ஆள் பிடிக்க உதவியாக இருக்குமே தவிர நாட்டு முன்னேற்றத்திற்கு அல்ல.

மருத்துவ மாணவர்கள் 8000 ரூபாய் ஊதியத்துடன் கிராமப்புற சேவை செய்வதா வேண்டாமா என்பதை மருத்துவ மாணவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஒவ்வொரு மருத்துவ மாணவரின் கல்விக்கும் அரசு செய்யும் செலவு ரூ15 லட்சம். சுமார் 60% மக்கள் வருமைகோட்டுக்கு கீள் வாழும் நாட்டில் இவ்வளவு பணத்தை செலவு செய்வது இவர்களை படிக்க வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பவா இல்லை தனியார் மருத்துவமனை வைத்து மக்களை ஏமாற்றி சொத்து சேர்க்கவா? ஒரு நல்ல திட்டத்தை அல்லது மாற்றத்தை அரசு அமல்படுத்த மக்களும் அரசியல் கட்சிகளும் காழ்புணர்ச்சி இன்றி வரவேற்பது நாட்டுக்கு நன்மை பயக்கும். சமுதாயம் ஓங்கும்.

No comments: