Thursday, May 8, 2008

கடவுளை மறுக்கத் துணியவேண்டும்

குடிஅரசு 21.5.1949 என்னை நாஸ்திகன் என்று சொல்லுகின்றவர்கள் நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அர்த்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன். நாஸ்திகத்திற்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது? அதிலும் சமதர்மக் கொள்கையை பரப்பவேண்டுமானால் நாஸ்திகத்தினால்தான் முடியும். நாஸ்திகம் என்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ரஷ்யாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள். பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையை பரப்ப முயற்சித்ததால்தான். நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல; சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழைய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தையும், ஏன், எவ்வித சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்றுதான் யதாப்பிரியர்கள் சொல்லித் திரிவார்கள். எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றன. கிறிஸ்துவையும், முகமது நபியையும்கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மும், சீர்திருத்தமும்தான் காரணமாகும். துருக்கியில் பாட்சாவும், ஆப்கானிஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம். ஏனென்றால், இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்ததென்றும், கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் கட்டளையென்றுமேதான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள். ஆகவே, நாம் இப்போது எதை எதை மாற்றவேண்டும் என்கிறோமோ அவை எல்லாம் கடவுள் செய்ததாகவும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால், அவற்றைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும்.
நாம் விரும்பும் தன்மை
Periyar Articles
குடிஅரசு 15. 1. 1949 நம் கழகமும், நமது முயற்சியும், பிரச்சாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற்றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம். இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது நிலை எப்படி இருக்கிறது? மிக மிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா? நாமும் நம் நாடும் உலகில் மிகவும் பழைமையானவர்களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிக மிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது, நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும்படி செய்யப்பட்டு விட்டோம். இன்றைய உலகம் மிகவும் முற்போக்கடைந்திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கின்றது. ஆனால், நாம் மாத்திரம் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம் வழக்கம் முதலிய காரியங்களும் அதற்கேற்றவண்ணம் உலகோர் பழிக்கும்படி இருக்கிறது. நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணரவேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம். நம்மில் 100-இல் 10 பேருக்குக்கூட கல்வி இல்லை. நாம் 100-க்கு 90 பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ்வாழ்வு வாழுகிறோம். இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும், கஷ்டத்தையும்பற்றி நமக்கு ஏன் கவலை இல்லை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்படவேண்டும். அதுவும் இந்த விஞ்ஞானக் காலத்தில் என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். நம்மிடத்தில் எந்தவிதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத் துறையில் கவலைப்படுவதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப்பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித்தனியாக, தத்தம் நலம் பேணி, வெறும் சுயநலக்காரர்களாகி, பொதுவில் தலைதூக்க இடமில்லாமல் போய்விட்டது. நமது சமுதாய வாழ்வுக்கென்று, நமக்கு பொருத்தமில்லாவற்றை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக்கொண்டு அவற்றுக்கு அடிமையாகி வாழ்வதுதான் நம்மைத் தலையெடுக்கவொட்டாமல் செய்துவிட்டது. நமக்கு நல்வழி காட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடானதாக இருந்து வருவதை நாம் உணரவில்லை. நம் மதம் நம்மை என்றைக்குமே முன்னேற்றாததாக இருந்துவருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடை ஜாதியாக இருக்கிறோம். நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவையாக, நம்மைச் சுரண்டுபவையாக, நம்மை மடையர்களாக ஆகும்படியாக ஆக்கி வருகிறது. நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாதவர்களாக ஆக்கிவிட்டன. ஆகையால், நாம் இத்துறையில் எல்லாம் பெருத்த மாறுதல்களை அடையவேண்டும். நம் கடவுள் தன்மையில் இருந்துவரும் கேடு என்னவென்றால், கடவுளை ஓர் உருவமாகக் கற்பித்துக்கொண்டு, அதற்காக வீடு வாசல் (கோயில்), பெண்டு பிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்துகொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல், நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேல்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள் நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ்டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக்கொண்டு, நம்மையும் நாமே இழிஜாதியாய்க் கருதிக்கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் - கூடாது என்று நம்பி எட்டி நிற்கிறோம். இதனால் நம்மை நாமே கீழ்மைப்படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றதனமும் உலகில் வேறெங்காவது காண முடியுமா? இன்றைய நம் கோயில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவற்றுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத்துகள்? அவற்றுக்கு எவ்வளவு பூசை உற்சவ போக போக்கியங்கள்? இவை யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால், அவை மூலம் பயனடைந்து,உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவற்றுக்குகெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக் கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும் நட்டமும் அடைகின்றவர்கள் யார்? நீங்கள் உண்மையாய்க் கருதிப் பாருங்கள்! இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோயில்களில் ஒரு கோயிலையாவது, மேல்ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவற்றுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறுமான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டிருக்குமா? நாம் கோயில் கட்டி, நாம் பணம் கொடுத்து, பூசை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழிஜாதி, நாலாஞ் ஜாதி சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத்தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல்ஜாதியாக இருந்து வருவானேன்? இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்கு புத்தி கூறி இருக்கிறார்களா? நாம் ஈன ஜாதி, இழிமக்கள் என்று ஆக்கப்பட்டதற்குக் காரணம் இந்தக் கடவுள்கள்தான் என்பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆனதற்குக் காரணம் இந்தக் கடவுள்களுக்குக் கட்டடம், சொத்து, போக போக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணருகின்றீர்களா, இல்லையா? அதுபோலவேதான், நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானை பிராமணனாகவும் ஆக்கியிருக்கிறதா, இல்லையா? அதுபோலவேதான், நம் தர்மங்கள் என்று சொல்லப்படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசிமகன், தாசிமகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக்கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா? ஆகவே, நமது இழிவுக்கும், ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவை அல்லாமல் வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா? நமது மேன்மைக்கு, நல்வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத்தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்றமடைந்தாகவேண்டும். நமது கடவுள்கள், காட்டுமிராண்டி காலத்தில் கற்பிக்கப்பட்டவை அல்லது கண்டுபிடிக்கப்பட்டவை, அல்லது நமக்குத் தெரிய வந்தவை, நமது மதமும், மனிதனுக்கு நாகரிகமும், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போதுள்ள அநாகரிக மக்களால் உண்டாக்கப்பட்டதாகும். நமது ஒழுக்கம், நீதி என்பவையும் அக்காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக்கேற்ப ஏற்பட்டவையாகும். இன்று காலம் மாறிவிட்டது. இயற்கைகூட மாறிவிட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறிவிட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆபாசம், ஆற்றல் மாறிவிட்டது. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு, 20 ஆம் நூற்றாண்டுக்கு 4000, 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா? ஆகவே, இன்றைக்கு ஏற்றபடியாக இவை மாற்றப்பட்டாகவேண்டும். இன்று எந்த ஒரு ஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறோமோ, அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கமும் கொண்ட கடவுள், மதம் வேண்டும். எப்படிப்பட்ட அறிவை, முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண்டும். இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத்தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித்தனங்கள், மூடநம்பிக்கைகள் எந்த மடையனிடமாவது, குடுக்கைத் தலையனிடமாவது உண்டா? நான் மதத்தின்மீது, கடவுள்மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்ட காலத்தில், அப்படிப்பட்ட அறிவுள்ளவர்களால் அவை சிருஷ்டிக்கப்பட்டவையாகும்; காட்டிக் கொடுக்கப்பட்டவையாகும். இந்த மதத்தை - கடவுள் தன்மைகளை ஏற்படுத்தின - உண்டாக்கிய - காட்டின பெரியோர்கள் தெய்வப் பிறவிகள் - தெய்வீகத்தன்மை உடையவர்கள் என்கிறதான அந்த மகான்களே இன்று இருப்பார்களேயானால், உடனே மாற்றிவிட்டு வேறு வேலை பார்ப்பார்கள், அல்லது வெளியே வர வெட்கப்படுவார்கள். உதாரணமாக, இவற்றை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது, மூன்று பெரிய கடவுள்கள்; ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள்; மாடு, பருந்து முதலிய வாகனங்கள்; பெண்டாட்டி பிள்ளை குட்டிகள்; போதாதற்கு வைப்பாட்டிகள்; மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு உருமாறி விபச்சாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள். இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள், முதல் ஜாதி பார்ப்பன ஜாதி, இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பை சுரண்டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம்! மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும், வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்! இந்த மதத்தில் உள்ள மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் நீதி - ஒழுக்கம் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு மாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டை அடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால், அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிற மனுநீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் நீதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அக்காலத்திய கடவுள், மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். பெரிய அறிவாளிகள்கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு எலெக்ட்ரிக் விளக்கு போட்டுக் கொள்ளவில்லையா? கட்டைவண்டிப் பிரயாணத்தை நீங்கள் தள்ளி விட்டு ஏராப்ளேன், ஆகாயக்கப்பல் பிரயாணத்தை நீங்கள் விரும்பவில்லையா? ஆகையால், ஆதிகாலம் என்கின்ற காலத்தில், ஆதிகால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றது போல் நடந்துகொள்ளுங்கள். "காலத்தோட கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டான்."
அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்
Periyar Articles
குடிஅரசு 6.12.1947 உலகத்தை எல்லாம் உண்டாக்கி, அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும் சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமையுடையவனென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகிறது என்று சொல்லுவதைவிட அவரால் அதிகத் தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது. அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜூ இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன. அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கிறாரென்பதைவிட தீமையே செய்கின்றார் என்பதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவர் என்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன. அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கையை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன. அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள், சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்துகொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப்பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார். உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லையென்று கருதித் தினம் சவரம் செய்துகொள்ளுவதைப் பார்க்கின்றோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக்கொண்டே வருவதையும் பார்க்கின்றோம். இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?
ஒரு யுக்தி ஆராய்ச்சி
Periyar Articles
குடிஅரசு 1. 7. 1944 மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதன் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவையும், தேவார திருவாசகங்கள், பிரதாபந்தங்கள் ஆகியவையும் ஆகும் என்பது எமது கருத்து. இந்தக் கருத்துக்கு சான்றுகள் அவற்றிலேயே இருக்கின்றன. விஷ்ணு அவதாரங்கள் அத்தனையும் ஆரியர்களின் எதிரிகளை அதாவது, மனுதர்மத்திற்கு விரோதமாயும், ஆரிய ஆதிக்கத்தை ஒடுக்கவும், தடுக்கவும் முயற்சித்தவர்களைக் கொல்லவும், அழிக்கவும், சதி செய்யவும் ஏற்பட்டவை. அதுபோலவே சிவன் அவதாரமான சுப்ரமணியனும், மற்றவர்களும் அதுபோலவே ஆரியரின் எதிரிகளை அழிக்க ஏற்பட்டவை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், சுரர், அசுரர், அரக்கர், இராட்சதர் என்கின்றவர்களைக் கொல்ல - அழிக்க வந்தவர்கள் என்றே சொல்லலாம். ஆரியர்களின் தனிக் கடவுள் உற்பத்திகளில் சிவன் முதற் கடவுள். அதாவது, முதலில் சிருஷ்டிக்கப்பட்ட கடவுளாகவும், ஸ்கந்தம் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட புராணம் ஆகவும் இருக்கவேண்டும். இவை விஷ்ணுவுக்கும், இராமாயணத்திற்கும் முந்தியதாகவும் இருக்கவேண்டும். இராமாயணம் சமீப காலத்தில் கந்த புராணத்தைப் பார்த்து சற்று திருந்திய காலத்திருத்தத்தோடு எழுதியதாகவே இருக்கவேண்டும். எப்படி ஆயுதங்களில் கல், கவண், ஈட்டி (வேல்) வில், துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டு, விஷப்புகை ஆகியவை ஒன்றிற்குப் பின் ஒன்று வரிசைக் கிரமமோ அதுபோல்தான். முதலில் சிவன், கந்தபுராணம், பிறகு விஷ்ணு சம்பந்தமான புராணங்கள், பரதம், இராமாயணம் ஆகியவை என்று சொல்ல வேண்டும். சுரர், அசுரர் என்பவை எல்லாம் ஆரியர், ஆரியர் அல்லாதவர் என்பதற்கு முதலில் ஏற்படுத்திக் கொண்ட (இட்ட) பெயர்களாகவும், தேவர்கள் இராட்சதர்கள் என்பவை பின்னால் ஏற்படுத்திக் கொண்ட பெயர்களாகவும் தெரிகின்றன. சிவன் முதற் கடவுள் என்பதற்கும், கந்த புராணம் முதல் புராணம் என்பதற்கும் உதாரணம் என்னவென்றால், சிவன் கற்பிதம் மிக்க பழைமையான காட்டுமிராண்டி காலத்தியதாக இருக்கிறது. அதாவது தலை சடையாகவும், ஆடை மிருகத்தின் தோல் ஆகவும், அணி (நகை) பாம்புகள் - எலும்புகளாகவும், புஷ்பம் கொன்றை எருக்கம் பூக்களாகவும், பாத்திரம் மண்டை ஓடு, ஆகாரம் தேன், தினைமாவு, கொழுக்கட்டையாகவும், ஆயுதம் 1-வது மழு, 2-வது சூலம், இடம் மலை, விளையாடுவது சுடலை, பூசிக் கொள்ளுவது சாம்பல், ரூபம் (சாயல்) அகோரம், வாகனம் மாடு, குணம் வெளிப்படையான ஹிம்சை, நடனம் காட்டுமிராண்டி ஆட்டம், சங்கீதக் கருவி உடுக்கை; பெண் ஜாதி இதுபோன்றே கோரரூபமுள்ள காளி, அவள் வாகனம் சிங்கம், பிள்ளைகள் ஒன்றுக்கு ஆறுமுகம், மற்றொன்றுக்கு யானைத் தலை விகார ரூபம். இந்த மாதிரியாக காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்றபடியாகவும், காட்டுமிராண்டிக் காலத்திய எண்ணங்களின் படியாகவும் கற்பிக்கப்பட்டிருக்கிறபடியால், சிவன்தான் முதலாவதாக சித்தரிக்கப்பட்ட கடவுளாக இருக்கவேண்டும் என்பதும் விளங்கும். அதுபோலவே, கந்தபுராணம் என்பதும் வைணவ புராணங்களைவிட முந்தியதாகவே இருக்கவேண்டும். ஏனெனில், கந்தனின் உற்பத்தியை ஆபாசமான முறையில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆயிர தேவ வருஷம் (அதாவது பல யுக காலம்) சிவன் புணர்ந்ததால் ஏற்பட்டான் என்றும், அந்த மிஞ்சின இந்திரியம்தான் என்றும், நெற்றிப் பொறியில் தோன்றினான் என்றும், மற்றும் பலவித ஆபாசமானதும் அசம்பாவிதமானதும், சிறிதும் அறிவுக்குப் பொருத்தமற்றதுமான வழியில் உற்பத்தியானதாக சித்திரிக்கப்பட்டிருக்கிறது. கந்த புராணத்தில் வரும் பாத்திரங்கள் அக்கினிமுகன், சிங்கமுகன், ஆட்டுமுகன் முதலியன இயற்கைக்கு மாறுபட்டவை. யுத்தமுறை இந்திரன் குயிலாக மாறினான், சுரன் சக்ரவாகப் புள் குருவியாக மாறினான், இந்திரன் மயிலாக வந்தான். சுரன், தீ, காற்று முதலிய உருவுடன் தோன்றினான், வேலால் குத்துதல், சேவலாக ஆகிவிடுதல் முதலியவை எல்லாம் காட்டுமிராண்டிக் காலத்திய கற்பனையேயாகும். இந்திரனுடைய நிலைமையும், இராமாயணத்தில் காட்டப்பட்டிருக்கும் இந்திரனைவிட காட்டுமிராண்டித்தன்மை கொண்டதாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றது.
ஆரியர் கடவுள்கள்
Periyar Articles
குடிஅரசு 18. 3. 1944 மாரியின் தன்மை ஆரியர் கடவுள்களுக்கு விபச்சாரித்தனத்தைக் கற்பிக்காவிட்டால் அவற்றுக்குப் பெருமை இல்லை என்று ஆரியர்கள் கருதி வந்திருக்கிறார்கள் போலும். ஆண் கடவுள்களுக்கு விபச்சாரித்தனம் கற்பித்துக் கொண்டிருப்பதில் நாம் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில், தேவ தாசிகளுக்கு விபச்சாரித்தனம் எப்படி குற்றமற்றதும் குறை கூறப்படாததுமாய் இருக்கிறதோ, அதுபோல் ஆண்களுக்கும் விபச்சாரித்தனம் குற்றமற்றதும் குறைகூறக் கூடாததுமாய் இருக்கின்றது. அது போலவே, ஆண் கடவுள்களின் விபச்சாரித்தனம் எப்படி போற்றி மகிழக் கூடியதாகவும், அதன் பேரால் உற்சவம், திருநாள் கொண்டாடும்படியான பெருமை அளிக்கத்தக்கதாகவும் இருக்கிறதோ, அதுபோல் ஆண்களின் விபச்சாரித்தனமும் ஆண்களுக்கு ஒரு பெருமையாகவே இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால், பல ஆண்கள் தங்கள் நடத்தையால் தங்களது மனைவிமார் தப்பாக நடக்க நேருமே, சில இடங்களில் தப்பாக நடந்து அடையாளங்கள் கூடத் தெரிந்து உலகம் இகழுகின்றதே என்று தெரிந்தும் அதைப்பற்றிக் கவலை இல்லாமல், பெயர் பெற்ற சில விபச்சாரிகளை தாங்கள் வைத்துக் கொண்டிருப்பதாகப் பிறர் கருதும்படி நடந்துகொள்ளுவார்களா? சில கிராமாந்தரங்களிலே "பண்ணையாருக்கு பிறந்தது பள்ளுப்பாடிப் பிழைக்குது; பண்டாரத்துக்குப் பிறந்தது (அதாவது தவசிப்பிள்ளை அல்லது சமையல்காரருக்குப் பிறந்தது) பட்டா மணியம் செய்யிது" என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, எஜமானனின் சொந்த மனைவி, சமையல்காரன் சம்பந்தத்தால் பெற்ற பிள்ளை எஜமானனது சொத்துக்கு உரிமையாகிவிட்டது என்றும், எஜமானனின் தாசியினிடம் எஜமானனுக்கே பிறந்த பிள்ளை கீழான தொழில் செய்து இழிவான நிலையில் இருக்கிறது என்றும் அருத்தமாகும். இதிலிருந்து, ஆண்கள் விபச்சாரித்தனத்தால் இழிவடைவதில்லை என்பது தெரிகிறது. இது எப்படியோ போகட்டும். எடுத்துக் கொண்ட விஷயத்திற்குப் போவோம். ஆனால், ஆரியர்கள், பெண் தெய்வங்களுக்கும் விபச்சாரித்தனக் குற்றத்தைச் சுமத்துவதற்குப் பின்வாங்குவதில்லை. இது மிகவும் இழித்துக் கூறத்தக்கதாகும். துரவுபதை, சீதை, அகலிகை, தாரை முதலியவர்கள்மீது சுமத்தப்பட்ட விபச்சாரக் குற்றங்களை ஆரியர்கள் குற்றமாகப் பாவிக்கவில்லை என்பதோடு, இப்பெண்களைப் பதிவிரதைகளுடனும் சேர்த்துவிட்டார்கள் என்றாலும், பாமர மக்கள் கடவுள்களான மாரியம்மன் முதலிய கடவுள்களுக்கும், விபச்சாரித்தனத்தைப் புகுத்தியது மிகவும் வெறுக்கத்தக்கதாகும். நம் கிராம தேவதையான மாரியம்மன், ஜமதக்கினி என்னும் ஒரு முனிவனுடைய மனைவியாய் ரேணுகை என்னும் பெயருடன் இருந்தவள். இவள், சித்திரசேனன் என்பவரின் நிழலைக்கண்டு மோகித்து மனம் கெட்டு கற்புக்குலைந்தாள். இது தெரிந்த கணவன் தன் மகனை அழைத்து இவளைக் கொலை புரியும்படி செய்தான். பிறகு, மகன் துக்கப்பட்டதன் பேரில் அவளை எழுப்ப மந்திர நீர் தெளித்தான். மகன், தலையை அடையாளம் கண்டுபிடித்தானே ஒழிய, உடலை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. ஆதலால் அவள் தலையை வேறு ஏதோ ஒரு உடலில் ஒட்டவைத்து அவளை உயிர்ப்பித்தான். அவள் எழுந்து கணவனை மன்னிக்கும்படி வேண்டினாள். கணவன் மன்னித்து, நீ ஊருக்கு வெளியே கிராமங்களுக்குப் போய் வாழ்ந்து கொண்டு இரு என்று சொன்னான். அந்தப்படியே மாரி கிராமங்களுக்குப் போய் கிராம தேவதையாக ஆகிவிட்டாள். ஆனால், கிராமத்திலுள்ளவர்கள், இவளுடைய தலை மாத்திரம் இவளுக்குச் சொந்தமாகவும், உடல் வேறு ஒருவருடையதாகவும் இருந்தால், இவளுடைய உடலை தள்ளிவிட்டு தலையை மாத்திரம் வைத்து வணங்குகிறார்கள். (அதனால்தான் சென்னை முதலிய இடங்களிலும் மாரி கோயில்களில் இன்றும் தலை உருவம் மாத்திரமே வைத்து வணங்கப்படுகிறது. கிராம மக்களும் பலர் தலை உருவம் மாத்திரம் வாங்கி வைக்கிறார்கள்.) இந்த அம்மையை வணங்குவோர் வேப்பிலையும், மாவும், இளநீரும் பயன்படுத்துவதன் காரணம் என்னவென்றால், இந்த அம்மை கொல்லப்பட்டபின் சுடுகாட்டில் வேகும்போது உயிர் பெற்று எழுந்ததும், நேராக வீட்டுக்கு வர முடியாமல் நிர்வாணத்துடன் வேப்பிலைகளால் தன் மானத்தை மறைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பறச்சேரிக்குள் போய்ப் புகுந்தாள். அங்குள்ள பற ஜனங்கள், இந்த அம்மை பார்ப்பனப் பெண் ஆதலால் சாப்பாடு போட்டால், தங்களுக்குப் பாவம் வரும் என்று அஞ்சி, அரிசி மாவையும், பழத்தையும், இளநீரையும் தந்து உதவினார்கள். அதனால், அவையே அந்த அம்மைக்கு அதாவது வேப்பந்தழையும், மாவும், உடையும் ஆகாரமுமாக ஆகிவிட்டன. அந்த அம்மைக்கு தண்ணீர் ஏன் குடம் குடமாய் ஊற்றுகிறார்கள் என்றால், அந்தம்மையை சுடுகாட்டில் வைத்துக் கொளுத்தும்போது தண்ணீர் தெளித்து எழுப்பியதால் உடலில் கொப்புளங்களோடு போய் சேரியில் புகுந்ததால், உடல் குளிருவதற்கு ஆக தண்ணீர் ஊற்றப்பட்டதாம். இந்தப்படியாக மாரியம்மன் கதை இருந்துவருகிறது. மற்ற விஷயம் எப்படியோ போனாலும், இந்தம்மை கற்பழிந்தாள்; அதனால் சாபம் பெற்று மாரியம்மை ஆனாள் என்றால், கற்பு கெடாத பெண் தெய்வமே நமக்கு இல்லை என்றல்லவா ஆகிறது. இதிலிருந்து, ஆரியர்களுடைய கற்புக்கு அர்த்தம் என்ன என்பது விளங்குகிறது. பிசாசைப்பற்றி ஆரியர்களும், இஸ்லாமியர்களில் பலரும் நம்புகிறார்கள். இது மிகவும் மதியீனமான காரியம். கடவுளை எந்த ரூபத்தில் எந்தக் குணத்தில் மனிதன் நம்பினாலும், அது எவ்வளவு முட்டாள்தனமானாலும், "மனிதன் ஒழுக்கமாக நடப்பதற்கு அந்த நம்பிக்கை ஒரு சாதனம்" என்றாவது சொல்லுகிறார்கள். ஆனால், பிசாசை நம்புவது எதற்கு அனுகூலம் என்று கேட்கிறேன். பிசாசை நம்புவதிலும், அதிலுள்ள ஆபாசம் என்னவென்றால், ஒருவன் தன் பெண்ஜாதிக்குப் பிசாசு பிடித்து இருக்கிறது என்று நம்புகிறான் என்றால், அதன் அர்த்தமென்ன? ஒரு பிசாசு தன் மனைவியை கலவி செய்துகொண்டு வருகிறது என்றுதானே கருதி அப்படிச் சொல்கிறான். ஒரு பெண்ணை "ஒரு பிசாசு முதல் 15, 20 பிசாசுகள்" பிடித்து இருக்கின்றன என்றுகூட புருஷன்மார்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அதுவும் பல ஜாதிப் பிசாசுகள்; அதிலும், "கீழ்ஜாதி"ப் பிசாசுகள் என்றுகூடச் சொல்லுகிறார்கள். இது மானமுள்ள பேச்சாகுமா? ஒருவன் மனைவியை 10 பிசாசுகள், 20 பிசாசுகள் கலவி செய்வதும், பிறகு இன்னும் கணவன் அவனை மனைவியாகக் கொள்ளுவதும் பார்த்தால் இந்தக் கணவனுக்கு சுயமரியாதை இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? இது என்ன மடத்தனம் என்பது எனக்கு விளங்கவில்லை. தன் மனைவியை வேறு மனிதன் எவனாவது திரும்பிப் பார்த்துவிட்டால் ஆகாயத்திற்கும், பூமிக்கும் குதிக்கும் என்பாய், 10,20 பேய்கள் சேர்ந்து கலவி செய்த பெண்ணை சேர்த்துக்கொண்டு தன்னை எப்படி "ஆண் பிள்ளை சிங்கம்" என்று சொல்லிக் கொள்ளமுடியும்? மனிதனைவிட பேய் பிசாசு உயர்வு என்று அர்த்தமா? அல்லது கையாலாகவில்லை; ஆனதால் எப்படியோ போய்த் தொலையட்டும் என்கிற வீரப்பிரதாபமா? என்று கேட்கிறேன். முஸ்லிம்களுக்கும்கூட சிலருக்கு இந்தப் பேய் உணர்ச்சி பிடித்திருப்பது பார்த்தால் அவர்கள் வேஷத்தில் முஸ்லிம்களே தவிர, உள்ளத்தில் இந்துக்களை (ஆரியர்களை) விட மோசமானவர்கள் என்றுதான் கருதவேண்டி இருக்கிறது. "கடவுள் நினைப்புக்கும், பேய் நினைப்புக்கும் ஒரு மயிர் இழை அளவுதான் வித்தியாசம்" என்று ஒரு பகுத்தறிவுவாதி சொல்லி இருக்கிறார். ஆனால், தங்கள் மனைவிமார்களிடம் பேய் கலவி செய்கிறது என்று கருதுகிற முஸ்லிம்கள், தங்கள் கடவுளைவிட பேய் எத்தனையோ கோடி மயிர் இழை அளவு பெரியது என்று கருதுகிறவர்களாவார்கள் என்று சொல்லுவேன். கடவுள் ஒருவன் மனைவியை இப்படிச் செய்வதில்லை. இந்துக்கள் கடவுள்களும் பேயைப்போல் 10, 15 கடவுள்கள் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு மற்றவன் மனைவியை கலவி செய்வதில்லை. ஆகையால், இரண்டு கூட்டத்தாருக்கும் இப்படிப்பட்ட புத்தி இருப்பது மிகவும் கேவலமானதேயாகும். நபி அவர்கள் குர்ஆனில் எங்காவது பேய் இருப்பதாகச் சொல்லி இருக்கிறாரா என்பது தெரியாது. இப்படிச் சொல்லியிருந்தால், அவர் பகுத்தறிவுவாதிகளின் கூட்டத்தில் சேர்க்கப்பட முடியாதவர் என்று ஆகிவிடாதா?
கடவுள்களால் என்ன பயன்?
Periyar Articles
குடிஅரசு 19.12.1937விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுளைப் பற்றியும், பேசிக் கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டித்தனமேயாகும். என்றாலும், நமது எதிரிகள் நம்மீது வேறு எவ்விதக் குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால், நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய் கெட்ட எண்ணத்துடன் பிரச்சாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழைய கால அதாவது காட்டுமனிதன் காலத்தைவிட கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும், முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள், ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும், மனதுக்கும் எட்டாதது என்றும், அது, பெயரும் குணமும், உருவமும் இணையும் இல்லாதது என்றும், மனிதரில் நன்மையான காரியங்கள் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்கு தீமையும் அளிக்கக் கூடியது என்றும், சொல்லி குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. இக்கருத்துடன் உணர்ந்திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும், நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும், பல அறிஞர்களும் அதை ஒப்புக் கொண்டு காரணம் சொல்லுகிறார்கள். ஆகையால், இன்றைய தினம் இந்துக்கள் என்பவர்களுடைய, சிறப்பாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்ளுவோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரக் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன. பாருங்கள், மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்காய், பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலியவையும் மற்றும் பல ஆபாச உருவங்களும் கடவுளாக வணங்கப்படுகின்றன. காசியில் ஒரு கோயிலில் இரண்டு உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவற்றுக்கும் பூஜை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்கு பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்ளவோடு இல்லாமல், இக்கடவுள்களுக்கு பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி, தாசி விபசாரித்தனம், ஆகாரம், உறக்கம், புணர்ச்சி முதலியவையும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும், இக்கடவுளுக்கு கல்யாணம், சாவு முதலியனவும்கூட கற்பிக்கப்படுகின்றன. கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை; செய்கையில் செய்து காட்டி, அதாவது கடவுள் விபசாரித்தனம் செய்வதாகவும், தாசி வீட்டுக்குப் போவதாகவும், மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவதாகவும் உற்சவங்கள் செய்து காட்டி, அவற்றுக்காக பல கோடிக் கணக்கான ரூபாய்களும், மனிதனின் விலை உயர்ந்த நேரமும், ஊக்கமும் உணர்ச்சியும் பாழக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20ஆம் நூற்றாண்டில் செய்யக் கூடியதா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களை கற்பித்துக் கொண்டு அவை மேல்கண்ட மாதிரியான காரியங்கள் செய்தாக புராணங்களையும், இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு, அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கின்றேன். இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கின்றேன். கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்வானா? இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக் கடவுளாவது ஏற்றுக் கொள்கிறதா? கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும், சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம் மூன்று தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே, அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலேயே பெண் ஜாதி வேண்டியிருந்தால், போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா, அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா, அல்லது ஓடிப்போய் விட்டதா, அல்லது முடிவெய்தி விட்டதா என்று நாமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக்கல்யாணத்துக்கு கொட்டு முழக்கு ஆடம்பரம், பணச் செலவு ஏன்? சாமி கல்யாண சமாராத சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களை பாழாக்குவதேன்? இந்தப் படி வருஷம் எத்தனை உற்சவம்? எங்கெங்கு உற்சவம்? இவற்றால் இதுவரை அடைந்த பலன் என்ன? நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 100-க்கு 95 பேர்கள் தற்குறி; நமது நாடும் உலகத்திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். ஒரு மனிதனுக்கு தினம் சராசரி இரண்டு அணா வரும்படி கூட இல்லை என்று சொல்லுகிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா? ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள்? இவை எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்கு கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப்படுவதென்றால், யோக்கியன் எப்படி சகித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும், ஆருத்திரா தரிசனத்துக்கும், தைப் பூசத்துக்கும், கார்த்திகை தீபத்துக்கும், திருப்பதிக் குடைக்கும், திருச்செந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷா வருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்துச் செலவு, மெனக்கேடு செலவு, உடல் கேடு, ஒழுக்கக் கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால், இக்கடவுள்களால் மக்களுக்கு நன்மையா, தீமையா என்று கேட்கிறேன். இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்குப் பயன்படுத்த முயற்சி செய்தால், வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களைக் கைப்பற்றி தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தினால், வேலையில்லாத் திண்டாட்டமும், தற்குறித் தன்மையும், அன்னிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டுதலும் இந்நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா என்று கேட்கிறேன். ஏதோ ஒரு கூட்டங்கள் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டுத் தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள்தனமாய் நடந்து கொள்வதா என்று கேட்கிறேன். மற்றும், கடவுள் பேரைச் சொல்லிக் கொண்டு, பக்தியை காரணம் காட்டிக் கொண்டு எவ்வளவு முட்டாள்தனமாய் நடந்துகொள்ளுகிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மக்கள் துணி கட்டிக் கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும், மொட்டை அடித்துக் கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும், சாம்பலையும் அடித்துக் கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும் கத்திகளையும் குத்திக் கொள்ளுவதும், அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆன காரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா? மற்றும் மக்கள் சாப்பிடக் கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவற்றை கல்லின் தலையில் குடம் குடமாய்க் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பரத் துணிகள் எதற்கு? லட்சம், பத்து லட்சம், கோடி பெறும்படியான ஆறு மதில், ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள், கட்டடங்கள், கோபுரங்கள் எதற்கு? தங்கம், வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவை எல்லாம் நாட்டு பொதுச் செல்வங்கள் அல்லவா? இவற்றை கல்லுகளுக்கு அழுதுவிட்டு, சோம்பேறி சூழ்ச்சிக்காரன் பார்ப்பான் வயிற்றை நிரப்பி, அவன் மக்களை அய்.சி.அய்., அய்கோர்ட் ஜட்ஜ், திவான்களாக ஆக்கிவிட்டு, இதுதான் கடவுள் தொண்டு என்றால், இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டுகளையும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக்கொள்ளுகிறார்களா? என்று கேட்கிறேன். இனி எப்பொழுதுதான் நமக்குப் புத்தி வருவது? இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகன் என்கிறான். அவன் பேச்சையும், அவனது எரிச்சலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக் கொண்டு முட்டாள் ஜனங்கள், மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடுகிறார்கள். அப்படியானால், இந்தக் கடவுள்களை ஒப்புக்கொண்டு இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமாய்க் கூத்தாடுவதுதானா ஆஸ்திகம்? இல்லாவிட்டால் நாஸ்திகமா? அப்படியானால், அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப்பற்றி எங்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. இந்த பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். ஏதோ எங்களுக்குத் தோன்றியதை - நாங்கள் சரி என்று நம்புவதை, அதாவது, நம் நாட்டுக்கு மேற்கூறிய மதமும், கடவுள்களும் கொடிய வியாதியாய் இருக்கின்றன என்றும், இவை ஒழிந்தாலொழிய நாடும் மனித சமூகமும் அறிவும், ஆற்றலும் முற்போக்கடையாது என்றும் கருதுவதை உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம். பொறுமையாய்க் கேட்டு, பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள் என்றுதான் சொல்லுகிறோமே ஒழிய, பார்ப்பனர்கள்போல, நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள் என்றோ, நம்பினால் தான் மோட்சம், நம்பாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை.
கடவுள்
Periyar Articles
குடிஅரசு 3.5.1936வினா: கடவுளைப்பற்றிப் பொதுவாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துகளை விளக்கிக் கூறு. விடை: கடவுள் வான மண்டலத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலோர் நம்புகிறார்கள். வினா: அப்புறம்? விடை: கடவுள் சர்வ ஞானம் உடையவனாம்; யாவற்றையும் பார்க்கிறானாம்; பிரபஞ்சம் முழுதும் அவனது உடைமையாம்; சர்வ வியாபியாம். வினா: கடவுள் ஒழுக்கத்தைப் பற்றி ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள்? விடை: அவன் நீதிமானாம்; புனிதனாம். வினா: வேறு என்ன? விடை: அவன் அன்புமயமானவனாம் வினா: கடவுள் அன்புமயமானவன் என்று ஜனங்கள் எப்பொழுதும் நம்புகிறார்களா? விடை: இல்லை. மக்கள் அறிவும் ஒழுக்கமும் உயர உயர, கடவுள் யோக்கியதையும் விருத்தியடைந்து கொண்டே போகிறது. வினா: உன் கருத்தை நன்கு விளக்கிக் கூறு. விடை: காட்டாளன் கடவுள் ஒரு காட்டாளனாகவும், திருடனாகவும் இருந்தான். அராபித் தலைவன் கடவுளான ஜாப் ஒரு கீழ்நாட்டு யதேச்சாதிகாரியாக இருந்தான். யூதர்கள் கடவுள் போல் வெறியனாயும், பழக்குப் பழி வாங்கும் குணமுடையவனாகவும் இருந்தான். கிறிஸ்தவர் கடவுளோ அற்பாயுளுடைய மக்கள் செய்யும் குற்றங்களுக்கு நித்திய நரக தண்டனை வழங்கக் கூடியவனாக இருக்கிறான். வினா: கடவுளைப் பற்றியே வேறு அபிப்பிராயங்கள் என்ன? விடை: மக்கள் மனோ வாக்குக் காயங்களினால் செய்யும் காரியங்களில் அவன் விரத்தையுடையவனாக இருக்கின்றானாம். வினா: ஏன்? விடை: அவனுக்கு விருப்பமான காரியங்களை நாம் செய்தால் பரிசளிக்கவும், விருப்பமில்லாத காரியங்களைச் செய்தால் தண்டனையளிக்கவும். வினா: கடவுளுக்கு என்ன என்ன பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன? விடை: ஒவ்வொரு தேசத்தாரும் கடவுளை ஒவ்வொரு பெயரால் அழைக்கிறார்கள். கிரேக்கர்கள் ஜீயூயஸ் என்றும், ரோமர்கள் ஜோவ் என்றும், பார்சிகள் ஆர்முஸ்ஜித் என்றும், இந்துக்கள் பிரம்மன் என்றும், யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஜிஹோவா என்றும், முகம்மதியர் அல்லா என்றும் கடவுளை அழைக்கிறார்கள். வினா: கடவுளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேறு பெயர்கள் எவை? விடை: பரம்பொருள், அனந்தன், மூலகாரணன், பரமாத்மா, நித்தியசக்தி, பிரபஞ்சம், இயற்கை, மனம், ஒழுங்கு முதலியன. வினா: ஆனால், ஜனங்கள் சொல்லும் கடவுள் ஒரே பொருளைத் தானா குறிக்கிறது? விடை: இல்லை. சிலர் கடவுளை ஒரு ஆளாக பாவனை செய்கிறார்கள். சிலர் ஒரு கருத்தெனக் கூறுகிறார்கள். வேறு சிலர் சட்டம் என்கிறார்கள். மற்றும், அறிய முடியாத ஒரு சக்தி என்கிறார்கள். ஒரு கூட்டத்தார், கடவுள் பூரணன் என்கிறார்கள். பின்னும் சிலர், ஜடப் பொருளும் மனமும் அய்க்கியப்படும் நிலையே கடவுள் என நம்புகிறார்கள். வினா: மக்கள் எப்பொழுதும் ஒரே கடவுளில் நம்பிக்கை வைத்து வந்திருக்கிறார்களா? விடை: மக்களில் பெரும்பாலோர் ஒரு கடவுள் அல்லது பல கடவுள்கள் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறார்கள். வினா: ஒன்று மேற்பட்ட கடவுளுண்டா? விடை: பல கடவுள்கள் உண்டென்றே பொதுவாக நம்பப்படுகிறது. வினா: பல கடவுள்களை நம்புகிறவர்களுக்கு என்ன பெயர் அளிக்கப்படுகிறது? விடை: பல கடவுள்களை நம்புவோர் பல தெய்வவாதிகள்; ஒரே கடவுளை நம்புவோர் ஏக தெய்வவாதிகள். வினா: சில, பல தெய்வவாதிகளின் பெயர் சொல்லு. விடை: எகிப்தியர், இந்துக்கள், கிரேக்கர், ரோமர். வினா: ஏக தெய்வவாதிகள் யார்? விடை: யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர். வினா: இவர்கள் எல்லாம் எப்பொழுதுமே ஏக தெய்வவாதிகளாக இருந்தார்களா? விடை: இல்லை. ஆதியில் எல்லா ஜாதியாரும் பல தெய்வங்களையே வணங்கி வந்தார்கள். வினா: பல தெய்வவாதிகளின் கடவுள்கள் எவை? விடை: சூரியன், சந்திரன், ஆவிகள், நிழல்கள், பூதங்கள், பேய் பிசாசுகள், மிருகங்கள், மலைகள், மரங்கள், பாறைகள், நதிகள் முதலியன. வினா: இவை எல்லாம் கடவுளாக நம்பப்பட்டதாய் உனக்கு எப்படித் தெரியும்? விடை: எப்படியெனில், ஜனங்கள் அவற்றை வணங்குகிறார்கள்; அவற்றிற்கு ஆலயங்கள் கட்டினார்கள்; விக்கிரங்கள் உண்டு பண்ணினார்கள்; அவற்றிற்கு பூஜைகள் நடத்தினார்கள். வினா: இந்த தெய்வங்கள் எல்லாம் ஒரே மாதிரி மகிமையுடையன என்று ஜனங்கள் நம்பினார்களா? விடை: எல்லா கடவுள்களுக்கும் மேலான ஒரு கடவுளுக்கு அவை அடிமைகள் அல்லது சின்னங்கள் என்று அறிவாளிகளான சொற்பப்பேர் நம்பினார்கள். வினா: அறிவில்லாதவர்களோ? விடை: அவற்றில் சில அதிக சக்தியுடையவை என்றும், சில கருணையுடையவை என்றும், சில அழகானவை என்றும், சில அதிக புத்தியடையவை என்றும் நம்பினார்கள். வினா: கடவுள் உற்பத்திக்கு அவர்கள் என்ன காரணம் கூறுகிறார்கள்? விடை: கடவுள் உற்பத்திக்குப் பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. வினா: அவற்றுள் சிலவற்றை விளக்கு. விடை: முதற்காரணம்: ஆதிகால மக்கள் அறிவில்லாதவர்களாயும், குழந்தைகளைப்போல் பயங்காளிகளாயும் இருந்தார்கள். எனவே, தனக்கு அறிய முடியாதவைமீது அவர்களுக்குப் பயமுண்டாயிற்று. கண்ணால் காண முடியாத ஏதோ ஒன்றே பயத்தை உண்டு பண்ணுகிறதென்று நம்பினார்கள். இரண்டாவது: மக்கள் பலவீனராயும், உதவியற்றவராயும் இருப்பதனால், அவர்களுக்கு உதவியளிக்கக் கூடிய சர்வ சக்தியுடைய ஒன்று இருக்கவேண்டுமென்று நம்பினார்கள். மூன்றாவது: மனிதன் இயல்பாக நேசமனப்பான்மையுடையவன். பிறருடன் கலந்து பழகவே அவன் எப்பொழுதும் விரும்புகிறான். எனவே, தன்னைச் சூழ்ந்திருக்கும் அறிய முடியாத சக்திகளை அறியவும், அவற்றுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளவும் விரும்புகிறான். இறுதியில், அறிய முடியாத சக்திகளை கடவுளாக உருவகப்படுத்திக் கொள்கிறான். நான்காவது: தெய்வ நம்பிக்கைக்கு மரணமே முக்கிய காரணம். வினா: அது எப்படி? விடை: நமக்கு உலகத்தில் சிரஞ்சீவியாக வாழ முடியுமானால், தெய்வங்களைப் பற்றியோ, தெய்வீக சக்திகளைப் பற்றியோ நினைக்கத் தேவையே உண்டாகாது. மரணம் உண்டு என்ற உணர்ச்சியினாலேயே மறு ஜென்மத்தைப் பற்றியும், பிறப்புக்கும், இறப்புக்கும் காரணமாக இருக்கும் ஒன்றைப் பற்றியும் யோசிக்க வேண்டியதாக ஏற்படுகிறது. பிராணிகளுக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாததனால் கடவுளும் இல்லை. வினா: தெய்வங்களின் தொகை பெருகிக் கொண்டே இருக்கிறதா? விடை: இல்லை. அது குறைந்துக்கொண்டே போகிறது. வினா: ஏன்? விடை: மக்களது அறிவும், சக்தியும் வளர வளர, தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை விருத்தியடைகிறது. வினா: அறிவில்லாதவர் கடவுளைவிட அறிவுடையோர் கடவுள் குறைவா? விடை: ஆம். நாகரிகமில்லாதவர்களே பல தெய்வங்களை வணங்குகிறார்கள். வினா: ஏக தெய்வவாதிகள் நிலைமை என்ன? விடை: இப்பொழுதும் பெரும்பாலார் ஏக தெய்வ நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கிறார்கள். வினா: கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களும் இருக்கிறார்களா? விடை: ஆம். அதிகம் பேர் இருக்கிறார்கள். வினா: அவர்கள் ஏன் கடவுளை நம்பவில்லை? விடை: பொது ஜனங்கள் சங்கற்பப்படியுள்ள கடவுள் நமது அறிவுக்கு அதீதமானதென்று அவர்கள் கூறுகிறார்கள். வினா: கடவுள் உண்மையை நிரூபித்துக் காட்ட முடியாதா? விடை: சிலர் முடியும் என்கிறார்கள்; சிலர் முடியாது என்கிறார்கள். வினா: கடவுள் உண்மைக்கு கூறப்படும் ஆதாரங்கள் எவை? விடை: முதல் ஆதாரம் காரண காரிய வாதம். வினா: அதை விளக்கிக் கூறு. விடை: எதற்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும். எனவே, பிரபஞ்சத்துக்கும் ஒரு கர்த்தா இருக்கவேண்டும். அந்த கர்த்தாவே கடவுள். வினா: இது ஒரு பலமான வாதமல்லவா? விடை: பலமான வாதந்தான்; ஆனால், முடிவானதல்ல. வினா: ஏன்? விடை: யாவற்றிற்கும் ஒரு காரணமிருக்க வேண்டுமானால், கடவுளுக்கும் ஒரு காரணமிருக்க வேண்டுமே. வினா: கடவுள் அனாதியாக இருக்கக் கூடாதா? விடை: காரணமில்லாமலே கடவுளுக்கு இயங்க முடியுமானால், காரணமில்லாமல் காரியமில்லை என்ற வாதமே அடியற்று வீழ்ந்து விடுகிறது. வினா: அப்புறம்? விடை: காரணமின்றி அனாதிகாலமாக கடவுள் இயங்க முடியுமானால், பிரபஞ்சமும் எக்காரணமுமின்றி அனாதிகாலமாக இயங்க முடியும். வினா: கடவுளுக்கும் ஒரு காரணமுண்டு என சம்மதித்தால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது? விடை: அப்படியானால், அந்தக் காரணத்துக்கு மூல காரணம் என்ன என்று ஆராய வேண்டியதாக ஏற்படும். அவ்வாறு ஆராயத் தொடங்கினால் முடிவே ஏற்படாது. வினா: வேறு வாதம் என்ன? விடை: பூரணத்துவ வாதம். வினா: அது என்ன? விளக்கிக் கூறு. விடை: அதாவது, நாம் அபூரணராக இருந்தாலும் (குறைபாடுடையவர்களாக இருந்தாலும்) பூரணமான ஒரு பொருள் உண்டென்ற உணர்ச்சி நமக்கு இருந்து கொண்டு இருக்கிறது. அந்த உணர்ச்சி அந்த பூரணப் பொருளின் சாயல் என்று நம்பப்படுகிறது. வினா: அதனால் நாம் ஊகிக்க வேண்டியதென்ன? விடை: அந்த உணர்ச்சி நமது உள்ளத்துள் இருந்துகொண்டு இருப்பதனால், அதற்கு ஆதாரமாக ஒன்று இருக்கவேண்டும் என்றும், அதுவே கடவுள் என்றும் ஊகிக்க இடமிருக்கிறது. வினா: மேலும் கொஞ்சம் விளக்குக. விடை: ஒரு பூரண வஸ்துவின் பிரதிபிம்பம் நமது உள்ளத்துத் தோன்ற வேண்டுமானால் அது உள் பொருளாக இருக்க வேண்டும். அது உள் பொருளாக இல்லையானால், பூரணமாக இருக்க முடியாது. வினா: அப்படியானால் முடிவு என்ன? விடை: கடவுளைப் பற்றிய உணர்ச்சி நமக்கு இருப்பதனால், கடவுள் ஒன்று இருக்கவேண்டும்; அப்படி ஒன்று இல்லையானால் நமக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டிருக்கவே செய்யாது என்பதுதான் முடிவு. வினா: இந்த வாதம் சரியானது தானா? விடை: முதல் வாதத்தைப் போல இது அவ்வளவு உறுதியானதல்ல. வினா: ஏன்? விடை: பூரணத்துவம் ஒரு குணம். உண்மை ஒரு நிலைமை. அவை இரண்டும் சம்பந்தமற்றவை. ஒரு பெரிய பட்டணம் கடலில் ஆழ்ந்து கிடப்பதாகவோ, மேக மண்டலத்தில் மிதந்து கொண்டிருப்பதாகவோ நமது உள்ளத்து ஒரு உணர்ச்சி ஏற்படலாம். ஆனால், அப்பேர்ப்பட்ட ஒரு பட்டணம் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதுபோல, ஒரு பூரண வஸ்துவைப்பற்றிய உணர்ச்சி நமக்கு இருப்பதனால், ஒரு பூரண வஸ்து இருக்கவேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. வினா: வேறொரு உதாரணத்தினால் விளக்கிக் காட்டு. விடை: பூமி பரந்திருப்பதாக வெகுகுலம் மக்கள் நம்பி வந்தார்கள். அந்த உணர்ச்சி உலகத்தின் பிரதி பிம்பமாக இருக்க முடியாது. ஏனெனில், பரபரப்பான பூமி இல்லவே இல்லை. வினா: அப்படியானால், பூரண வஸ்துகளும், அபூரண வஸ்துகளும் நமது மனோ கற்பிதம்தானா? விடை: ஆம் வினா: அடுத்த வாதம் என்ன? விடை: அடுத்தது உருவக வாதம். வினா: அதை விளக்கு. விடை: வினாடி, நிமிஷம், மணி காட்டும் முறையில் ஒரு கடிகாரம் உருப்படுத்தப்பட்டிருப்பதனால் அது ஒரு நோக்கத்துடன் உண்டு பண்ணப்பட்டிருக்கின்றதென்றும், அதற்கு ஒரு கர்த்தா இருக்கவேண்டுமென்றும் நாம் அறிகிறோம். அதுபோல, உலகமும் ஒரு நோக்கத்தோடு சிருஷ்டிக்கப்பட்டிருப்பதனால் அதற்கு ஒரு கர்த்தா இருக்கவேண்டும் அந்த கர்த்தாவே கடவுள். வினா: இந்த வாதம் எப்பேர்ப்பட்டது? விடை: கடிகாரத்தை உலகத்துக்கு உவமையாகக் கூற முடியாது. கடிகாரம் எதற்காக உண்டு பண்ணப்பட்டதென்று கூறிவிடலாம். ஆனால், உலகம் எதற்காக உண்டு பண்ணப்பட்டதென்று கூறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. வினா: பிரபஞ்ச அமைப்பு, கடிகார அமைப்புப்போல அவ்வளவு தெளிவானதல்லவா? விடை: தெளிவாக இருந்தால் இரகசியங்களுக்கு இடமே இல்லை. வினா: கடிகாரத்தைப் பற்றி நாம் பூரணமாக அறிந்திருப்பதுபோல, பிரபஞ்சத்தைப்பற்றி நாம் பூரணமாக அறியவில்லையென்று நீ கூறுகிறாயா? விடை: ஆம். கடிகாரத்தின் அமைப்பை நமக்குத் தெளிவாக விளக்கிக் கூற முடியும். பிரபஞ்ச அமைப்பை தெளிவாக விளக்கிக் கூற முடியாது. வினா: இந்த வாதத்தைப் பற்றி வேறு ஏதாவது சொல்ல வேண்டியதுண்டா? விடை: கடிகாரத்தைப் பார்த்தவுடன், அதை உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்கவேண்டுமென்று அறியலாமேயன்றி, கடிகார உற்பத்திக் காரணமான பொருள்களை உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்க வேண்டுமென்றும் சொல்ல முடியாது. வினா: வேறு என்ன? விடை: உலகத்தை உண்டு பண்ணியவன் ஒருவன் உண்டென்று ஒப்புக்கொண்டாலும், உலகத்தைச் சிருஷ்டித்தவன் ஒருவன் இருப்பதாக நமக்கு ருசுப்படுத்த முடியாது. வினா: இம்மாதிரியான சங்கடங்கள் பல இருப்பதனால் பிரஸ்தாப விஷயத்தில் நாம் கைக்கொள்ள வேண்டிய நிலை என்ன? விடை: நாம் அந்தரங்க சுத்தியோடு ஆராய வேண்டும். பிடிவாதமாக எதையும் நம்பக்கூடாது. திறந்த மனத்தோடு உண்மையை அறிய முயலவேண்டும்! வினா: கடவுள் என்ற பெயரை நாம் எந்தப் பொருளில் வழங்கவேண்டும்? விடை: ஜீவகோடிகளின் உயர்ந்த லட்சியத்தைக் குறிக்கும் பொருளாகவே நாம் வழங்கவேண்டும். வினா: அப்படியானால், சிலரின் தெய்வங்கள் உத்தமமானவை என்றும், சிலரின் தெய்வங்கள் மோசமானவை என்றும் ஏற்படாதா? விடை: ஆம். நிச்சயமாக ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் அவனவன் லட்சியத்துக்கும், கடவுளுக்கும் அளவுகோலாக இருக்கிறான். வினா: மேலும் கொஞ்சம் விளக்கு. விடை: நமது கண் பார்வை எட்டும் அளவுக்கே நமக்குப் பார்க்க முடியும். அதுபோல, நமது மனோ சக்திக்கு இயன்ற அளவிலேயே நமக்குச் சிந்திக்கவும், விரும்பவும் முடியும். வினா: அப்படியானால் கடவுளைச் சிருஷ்டித்தது யார்? விடை: ஒவ்வொருவனும் தன் கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டான்.
மிருகமும், பட்சியும், மலமும் கடவுளா?
Periyar Articles
குடிஅரசு 5.4.1936 நமது கேவல நிலைமையும், முட்டாள்தனத்தையும், நம்மை பார்ப்பனர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பதையும் விளக்கும் போது, நமக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி இருந்தால் சிரிப்பு வருமா? ஆத்திரமும், வெட்கமும் அல்லவா வரும்? நமது இழிவானது நேற்று, இன்று என்று இல்லாமல், ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருவதால், நமது ரத்தம் வெட்கப்படுவதற்கில்லாமல் இழிவிலேயே உறைந்து போய்விட்டது. மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும் சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய, சிரிப்பு விளையாட்டில் ஏற்படக்கூடியதல்ல. இதற்காக அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டிவரும். அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும், இழிவும் அடையாமல், நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ்நிலைமைக்கும், ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவதென்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும். சமூகத்தில் மேல்ஜாதி, கீழ்ஜாதி, அடிமை ஜாதி என்பவை இருப்பதோடு, ஆண் - பெண் தன்மைகளில் உயர்வு தாழ்வும் இருந்து வருகிறது. இவை தவிர, ஏழை-பணக்காரன், முதலாளி - தொழிலாளி தன்மையும் இருந்து வருகிறது. இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டதாகவும், சில முயற்சியால் செயற்கையாக ஏற்பட்டதாகவும், இவ்வளவுக்கும் காரணம் மனிதன் அல்லவென்றும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும் பொருந்திய கடவுளால் ஏற்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல்நிலையில் உள்ளவனும், கீழ்நிலையில் உள்ளவனும் நம்பிக்கொண்டு இருக்கிறான். இந்த மூட நம்பிக்கைதான் வெகுகாலமாக மனித சமூகத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக் கொண்டு வருகிறது. சாதாரணமாக, மனிதப் பிறவியில் கீழ்ஜாதி, மேல்ஜாதி, அடிமை (பறை) ஜாதி என்பவை இன்று நேற்று ஏற்பட்டதல்ல; பல ஆணிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருகிறது. இதற்கு ஆக நாளது வரை யாரும் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. ஏனெனில், செய்ய முடியாதபடி அவனவன் நம்பிக்கையைச் செய்து கொண்டான். ஜாதி வித்தியாசங்களுக்கும், ஜாதிக் கொடுமைக்கும் கடவுள் காரணம் என்று எண்ணிய பிறகு யாரால்தான் பரிகாரம் செய்ய முடியும்? எந்த மனிதனும் மற்ற ஜாதியைப் பற்றி சந்தேகப்பட்டாலும், தன் ஜாதியைப் பற்றி நம்பிக்கையாகவும், மேன்மையாகவும் கற்பித்துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்தி பெருமையடைகிறான்; சாஸ்திரங்களில், மதங்களில் அவற்றிற்கு ஆதாரங்கள் கண்டுபிடிக்கிறான்; புராணங்கள் எழுதி வைத்துப் பெருமையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடம் மாத்திரமல்ல; எல்லா ஜாதியாரிடமும் இருந்து வருகிறது. ஜாதி பேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான். ஜாதிக் கலப்பை விபசாரித்தனமாக எண்ணுகிறான். இந்த மனப்பான்மை ஜாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது. அஸ்திவாரத்தில் கையை வைத்து ஜாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள். திருவள்ளுவர், கபிலர், ராமானுஜர் முதலிய புராணக்காரர்களும், பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்பந்தமான சில புது முயற்சிகளும், மற்றும் எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளும் எல்லாம், உண்மையறியாமலும், உலகமொப்புக்கும், தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள ஜாதி பேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும்படியாகவோ செய்த காரியங்கள் அல்ல. கடவுளும், மதமும் உலகில் ஆயிரம் வருஷத்துக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மறைந்தும் மாறுதலடைந்தும் சீர்திருத்தம் பெற்று இருக்கிறது. கடவுளால், மதத்தினால் பிழைக்கும்படி வாழ்க்கை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் தவிர - சமூகம் தவிர, மற்ற இடங்களில் கடவுளும், மதமும் எவ்வளவோ குறைவடைந்து வருகின்றன. உருவமில்லாத, பெயரில்லாத கடவுள்கள் தோன்றிவிட்டன. மத சின்னமில்லாத மதங்கள் தோன்றிவிட்டன. இரண்டையும் பற்றி கவலைப்படாமல் தங்கள் தங்கள் வேலையைக் கவனிக்கும்படியான உணர்ச்சிகளும் தோன்றிவிட்டன. தங்களுக்கு அதைப்பற்றிய கவலையில்லாமல் மற்றவனை ஏய்க்கவும், கட்டுப்படுத்தவும், அடிமையாக்கவும் மாத்திரமே இன்று கடவுளும், மதமும் வெகு மக்களால் கையாளப்படுகிறதே ஒழிய வேறில்லை. சகல துறைகளிலும் உலகம் முற்போக்கடைவதுபோலவே கடவுளிலும் மதத்திலும்கூட உலகம் முற்போக்கடைந்து வருகிறது. சுயமரியாதை இயக்கம் இந்த க்ஷணமே எல்லோரையுமே கடவுள், மத நம்பிக்கையை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தவில்லை. நமக்கு புரியாததும், நம்மால் அறிய முடியாததும், குணம், உருவம், சலனம் இல்லாததும் ஆன கடவுளைப் பற்றி சுயமரியாதை இயக்கத்துக்கும் கவலையில்லை. மற்றபடி, கடவுளைப் பற்றி தெரிந்துவிட்டதாகச் சொல்லுவதும், அதற்கு உருவம், பெயர், குணம், சலனம் ஏற்படுத்துவதும், அதன்மீது பொறுப்பைச் சுமத்துவதும், மனிதன் மற்றவர்களால் அடையும் கொடுமைக்கும், இழிவுக்கும் பொறுப்பாக்குவதுமான கடவுள் உணர்ச்சியையே சுயமரியாதை இயக்கம் குறை கூறுகிறது. மற்றும், கண்டதெல்லாம், நினைத்ததெல்லாம் கடவுள் என்கின்ற உணர்ச்சியையும், ஆயிரக்கணக்கான கடவுள்கள் உணர்ச்சியையும் ஒழிக்கவேண்டும் என்கின்றது. இன்று ஒரு இந்துவால் எவை எவை எல்லாம் கடவுள் என்பதாக மதிக்கப்படுகிறது என்றால், மரத்தில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படுகிறது; புல் பூண்டுகளில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படுகிறது; மலத்தில் ஒரு கூட்டமும்; பூச்சி புழுக்களில் ஒரு கூட்டமும்; மிருகங்களில் பன்றி, நாய், கழுதை, மாடு முதலிய ஒரு கூட்ட மிருகமும்; பட்சியில் கருடன் காக்காய், கோழி முதலிய ஒரு கூட்டமும்; கல்லுகளிலும், மண்களிலும் ஒரு கூட்டமும்; காகிதங்களிலும், எழுத்துகளிலும் ஒரு கூட்டமும்; மனிதர்களில் ஒரு கூட்டமும் இன்று மனிதனால் கடவுளாகப் பாவிக்கப்பட்டு பூசை, வணக்கம், பலி முதலியவை செய்து, ஏராளமான பொருள்கள் நாசமாக்கப்பட்டு வரப்படுகின்றன. இந்த முட்டாள்தனங்களையும், மோசக் கருத்துகளையும் முதலில் ஒழிக்கவேண்டுமென்றுதான் சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறது. இதைத் தைரியமாய் எடுத்துச் சொல்ல இன்று இந்நாட்டில் சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான் இருக்கிறது. அது, இந்த மாதிரியான கடவுள் உணர்ச்சிகளை ஒழித்துத் தீருவதென்றே கங்கணம் கட்டிக்கொண்டு உயிர் வாழுகின்றது. நாஸ்திக இயக்கம் என்று சொல்வதாலேயே அது பயந்து கொள்ளப் போவதில்லை. கடைசி வரை அது உழைத்துத்தான் தீரும். மத விஷயத்திலும் இப்படித்தான் இருந்து வருகிறது. ஆகவே, சுயமரியாதை இயக்கம் இன்னது என்றும், காங்கிரஸ் இயக்கம் இன்னது என்றும் உணர்ந்து, உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள். விஷமப் பிரச்சாரத்துக்கும், ஏமாற்றுப் பிரச்சாரத்துக்கும் ஆளாகாதீர்கள்.
பிரார்த்தனை
Periyar Articles
பகுத்தறிவு 1.1.1936
பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும், அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்துவருகிறது. இது எல்லா நாட்டிலும், எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது. பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லுவதுண்டு. இவையெல்லாம், கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதேயாகும். தனக்கு வேண்டியவற்றையெல்லாம், அதாவது இம்மையில் இவ்வுலகில் யுக்தி, செல்வம், சுகம், இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவையும், மறுமையில் மேல் லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவையும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்த பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானவைதான் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன் பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும். அதாவது, கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவபலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறுபெயர் சொல்லவேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால், தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது, படித்துப் பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், மோட்சத்துக்கு போக வேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால், இவற்றுக்கெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு, வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும், மோசடியும் என்றும் சொல்லுவது தான் மிகப் பொருத்தமாம். பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்னையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை. மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்காக பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவற்றை அடையப் பார்ப்பதும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி அதை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூடச் சொல்லி ஆகவேண்டி இருக்கிறது. எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக் கொண்டு பலனையடைய எதிர்பாராமல், காரியத்தைச் செய்யாது, பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள், வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவாளி என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக்காரனென்றும்தானே சொல்லவேண்டும். தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசென்சு - அனுமதிச் சீட்டு கொடுப்பது போலாகிறது. விதை நட்டு தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்கக் கத்தி எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை. கடவுள் சகலத்தையும் உணர்ந்து அதற்குத் தகுந்தபடி பலன் கொடுக்கக்கூடிய சர்வக்ஞத்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதி இருப்பானேயானால், அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலையில் இடிபடவோ, அதற்காக நேரத்தைச் செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணியமாட்டான். ஏனென்றால், சகல காரியமும் கடவுளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு கடவுள், யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்துக்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்துவிட்டார் என்றும் (அதாவது விதியின்படிதான் முடியும் என்றும்) தெரிந்திருந்த ஒருவன், அந்த தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். சாதாரணமாக மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற - வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது. அதாவது, எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு நான் இன்ன காரியம் செய்கின்றேன் அல்லது உனக்கு இன்ன காரியம் செய்கிறேன், அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது. இவர்கள் எல்லோரும் அதாவது இந்த பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளை புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லி ஆகவேண்டும். சிலர் சொல்லுகிறார்கள், மனிதன் பாபி, அவன் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்பு கேட்டுத்தான் தீரவேண்டும் என்கின்றார்கள். நான் பாபம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டும் என்று பிரார்த்திப்பதை கடவுள் ஏற்றுக் கொள்வதானால், மனிதன் எந்தப் பாபத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால், புண்ணியம் என்பதற்கு அர்த்தம் என்ன? ஆகவே, கடவுள் கற்பனையைவிட இந்த பிரார்த்தனைக் கற்பனையானது, மிகமிக மோசமானது என்றுதான் சொல்லவேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் போய்விடும். மனிதன் பூஜையும், பிரார்த்தனையும் செய்வதற்குத்தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்காக பூசையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை. குரு (பாதிரி), புரோகிதன் (பார்ப்பனர்) ஆகியோர் பிழைப்புக்காகவே பிரார்த்தனையும், கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது. இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ, முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி, மனிதனுடைய செய்கையும், எண்ணமும் சித்திரபுத்திரனுக்கோ, கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்காக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும் எமதர்மராஜாவும் இருந்தே இருக்கிறான். மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பது மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும் புரோகிதனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது. பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது? என்பவையெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது. 21. பிரார்த்தனை பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும், அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்துவருகிறது. இது எல்லா நாட்டிலும், எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது. பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லுவதுண்டு. இவையெல்லாம், கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதேயாகும். தனக்கு வேண்டியவற்றையெல்லாம், அதாவது இம்மையில் இவ்வுலகில் யுக்தி, செல்வம், சுகம், இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவையும், மறுமையில் மேல் லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவையும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இந்த பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானவைதான் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன் பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும். அதாவது, கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவபலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறுபெயர் சொல்லவேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால், தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது, படித்துப் பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், மோட்சத்துக்கு போக வேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால், இவற்றுக்கெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு, வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும், மோசடியும் என்றும் சொல்லுவது தான் மிகப் பொருத்தமாம். பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்னையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை. மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்காக பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவற்றை அடையப் பார்ப்பதும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி அதை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூடச் சொல்லி ஆகவேண்டி இருக்கிறது. எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக் கொண்டு பலனையடைய எதிர்பாராமல், காரியத்தைச் செய்யாது, பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள், வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவாளி என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக்காரனென்றும்தானே சொல்லவேண்டும். தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசென்சு - அனுமதிச் சீட்டு கொடுப்பது போலாகிறது. விதை நட்டு தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்கக் கத்தி எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை. கடவுள் சகலத்தையும் உணர்ந்து அதற்குத் தகுந்தபடி பலன் கொடுக்கக்கூடிய சர்வக்ஞத்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதி இருப்பானேயானால், அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலையில் இடிபடவோ, அதற்காக நேரத்தைச் செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணியமாட்டான். ஏனென்றால், சகல காரியமும் கடவுளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு கடவுள், யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்துக்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்துவிட்டார் என்றும் (அதாவது விதியின்படிதான் முடியும் என்றும்) தெரிந்திருந்த ஒருவன், அந்த தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். சாதாரணமாக மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற - வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது. அதாவது, எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு நான் இன்ன காரியம் செய்கின்றேன் அல்லது உனக்கு இன்ன காரியம் செய்கிறேன், அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது. இவர்கள் எல்லோரும் அதாவது இந்த பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளை புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லி ஆகவேண்டும். சிலர் சொல்லுகிறார்கள், மனிதன் பாபி, அவன் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்பு கேட்டுத்தான் தீரவேண்டும் என்கின்றார்கள். நான் பாபம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டும் என்று பிரார்த்திப்பதை கடவுள் ஏற்றுக் கொள்வதானால், மனிதன் எந்தப் பாபத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால், புண்ணியம் என்பதற்கு அர்த்தம் என்ன? ஆகவே, கடவுள் கற்பனையைவிட இந்த பிரார்த்தனைக் கற்பனையானது, மிகமிக மோசமானது என்றுதான் சொல்லவேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் போய்விடும். மனிதன் பூஜையும், பிரார்த்தனையும் செய்வதற்குத்தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்காக பூசையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை. குரு (பாதிரி), புரோகிதன் (பார்ப்பனர்) ஆகியோர் பிழைப்புக்காகவே பிரார்த்தனையும், கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது. இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ, முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி, மனிதனுடைய செய்கையும், எண்ணமும் சித்திரபுத்திரனுக்கோ, கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்காக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும் எமதர்மராஜாவும் இருந்தே இருக்கிறான். மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பது மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும் புரோகிதனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது. பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது? என்பவையெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை, (பகுத்தறிவு 1.1.1936).
பெண்களை விபசாரிகளாய் படைத்த கடவுள்
Periyar Articles
குடிஅரசு 2.3.1930
ஆஸ்திகப் பெண்: என்ன அய்யா, நாஸ்திகரே! மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப்பற்றிய ஆட்சேபனைகள் எப்படி இருந்தாலும், பெண்களை கடவுளே விபசாரிகளாய் பிறப்பித்து விட்டார்; ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக்கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்ளுகிறேன்.
நாஸ்திகன்: அம்மா, அப்படி தாங்கள் சொல்லக்கூடாது. மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவதை நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆ.பெண்: அதென்ன அய்யா, நீங்கள்கூட அப்படிச் சொல்லுகின்றீர்கள்! இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கியதை? எல்லாப் பெண்களுமா விபசாரிகள்?
நா: ஆம் அம்மா! எல்லோருமேதான் "விபசாரிகள்", இதற்காக நீங்கள் கோபித்துக் கொள்வதில் பயனில்லை.
ஆ.பெண்: என்ன அய்யா, உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரையுமா நீங்கள் விபசாரிகள் என்று நினைக்கிறீர்கள்?
நா: ஆம். ஆம். ஆம். இந்த உலகத்தில் உள்ள பெண்கள் மாத்திரமல்ல; மேல் உலகத்தில் உள்ள பெண்களையும்கூடத்தான் நான் "கற்பு உள்ளவர்கள்" என்று சொல்லுவதில்லை.
ஆ.பெண்: இப்படிச் சொல்லுவது தர்மமாகுமா?
நா: கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தின் சாரமான மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவது எப்படிப் பொய்யாகும், அதர்மமாகும், சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டுமானால் அது சரியென்று நான் ருஜூப்படுத்தவும் தயாராயிருக்கிறேன்.
ஆ.பெண்: என்ன ருஜூ, நாசமாய்ப் போன ருஜூ; சற்று காட்டுங்கள் பார்ப்போம்.
நா: நம் பெரியவர்கள் கற்பைப் பரீட்சிக்கத் தக்க பரீட்சைகள் வைத்திருக்கின்றார்கள். ஆதலால் அவர்களை நாம் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது.
ஆ.பெண்: என்ன பரீட்சை அய்யா அது?
நா: சொல்லட்டுமா; கோபித்துக் கொள்ளக்கூடாது!
ஆ.பெண்: கோபமென்ன அய்யா! மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்! தாராளமாய்ச் சொல்லுங்கள்।
நா: தெய்வம் தொழாள் கொழுநனைத் தொழுவாள் பெய்யெனப் பெய்யுமழை என்கின்ற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கைக் கேட்டிருக்கிறீர்களா?
ஆ.பெண்: ஆம் கேட்டிருக்கின்றேன்.
நா: கற்புடைய மங்கையர்கள் மழை பெய்யென்றால் பெய்யும் என்கின்ற வேதவாக்கையும் கேட்டிருக்கின்றீர்களா?
ஆ.பெண்: ஆம் கேட்டிருக்கின்றேன்.
நா: சரி... ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது; குடிக்கத் தண்ணீர் கிடையாது. தயவு செய்து ஒரு இரண்டு உழவு (2 அங்குலம்) மழை பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
ஆ.பெண்: இது நம்மாலாகின்ற காரியமா? தெய்வத்திற்கு இஷ்டமிருந்தாலல்லவா முடியும். இந்த ஊர்க்காரர்கள் என்ன அக்கிரமம் பண்ணினார்களோ! அதனால் இந்த பாவிகள் மழை இல்லாமல் தவிக்கின்றார்கள்.
நா: எந்தப் பாவி எப்படித் தவித்தாலும், நீங்கள் கற்புள்ளவர்களாயிருந்தால் மழை பெய்யென்றால் பெய்துதானே ஆக வேண்டும் அல்லது இந்த ஊரில் ஒரு கற்புள்ள பெண்ணாவது இருந்தால் மழை பெய்துதானே தீர வேண்டும்। எப்போது பெண்கள் சொன்னால் மழை பெய்வதில்லையோ, அப்போதே, பெண்கள் எல்லாம் கற்புள்ளவர்கள் அல்ல, "விபசாரிகள்" என்று ருஜூவாகவில்லையா? பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். ஆகையால் இனிமேல் சாஸ்திரங்களைப்பற்றி சந்தேகப்படாதீர்கள்! அதிலும் ரிஷிகளும், முனிவர்களும் சொன்ன வாக்கியமும், கடவுள் சொன்ன வேதத்தின் சத்தாகியதும், இந்து மதத்திற்கு ஆதாரமானதும், மோட்சத்திற்கு சாதகமானதுமான மனுதர்ம சாஸ்திரம் பொய்யாகுமா அம்மா! அதனால்தானே நான்கூட கல்யாணமே செய்து கொள்ளவில்லை!
ஆ.பெண்: எதனால்தான்?
நா: பெண்களைக் கல்யாணம் செய்து கொண்டால் புருஷன்மார்கள், அவர்கள் விபசாரித்தனம் செய்யாமல் ஜாக்கிரதையாய்க் காப்பாற்ற வேண்டுமென்றிருக்கின்றதனால்தான்.
ஆ.பெண்: பின்னை என்ன செய்கின்றீர்கள்?
நா: கடவுளோ பிறவியிலேயே பெண்களை விபசாரிகளாய்ப் பிறப்பித்து விட்டார். யார் காப்பாற்றிப் பார்த்தும் முடியாமல் போய் விட்டது. ஒரு சொட்டு மழைக்கும் வழியில்லை. ஆதலால், எவனோ கட்டிக் கொண்டு காப்பாற்றட்டும்; கடவுள் செயல் பிரகாரம் நமக்குக் கிடைப்பது கிடைக்கட்டும் என்பதாகக் கருதி சிவனே என்று உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்ற மாட்டானா என்கின்ற தைரியம் உண்டு.
ஆ.பெண்: அப்படியானால் நீங்கள் முன் சொல்லிக் கொண்டிருந்தததில் ஒன்றும் குற்றமில்லை இந்த மனுதர்ம சாஸ்திரமும், வேதமும், பொய்யாமொழியும், நீதியும், இவற்றை உண்டாக்கியதோ அல்லது ஒப்புக்கொண்டதோ ஆன கடவுள்களும் நாசமாய்ப் போகட்டும். இனிமேல் இந்த ஆஸ்திகம் நமக்கு வேண்டவே வேண்டாம். நமது எதிரிகள் நாட்டுக்கும் வேண்டாம்.

சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது,("குடி அரசு", 2.3.1930).
கடவுள் கருணை
Periyar Articles
குடிஅரசு 16.11.1930

இந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூகம்பத்தால் கடவுள் தன்னடி சோதிக்குச் சேர்த்துக் கொண்ட மக்கள் கணக்கு: பெக்கிங் (சீனா) 1,00,00 கெய்ரோ 40,000 காஷான் 40,000 லிஸ்பன் 50,000 மொராக்கோ 12,000 தென் அமெரிக்கா 50,000 அலப்போ 20,000 தென் இத்தாலி 14,000 மென்சோடா 12,000 பெருஎக்வாடா 25,000 கராகாடோ 37,000 ஜப்பான் 30,000 இந்தியா 20,000 பிரான்சிஸ்கோ, சிசிலி 77,000 மத்திய இத்தாலி 30,000 கான்சுசினா 3,00,000 ஜப்பான் 2,20,000 சில்லறையாக பல இடங்களில் 1,00,000; ஆக மொத்தம் சுமார் 10 இலட்சத்திற் மேற்பட்ட ஜனங்களாகும்.
இது தவிர இடியாலும், மின்னலாலும், எரிமலை நெருப்பாலும், வெள்ளத்தாலும், புயல் காற்றாலும், தன்னடி சேர்த்துக் கொண்ட மக்களின் அளவு இதைப்போல் பல மடங்குகள் இருக்கும். இவ்வளவு ஜீவ காருண்யமுள்ள கடவுளின் கருணையை எப்படிப் புகழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதலால் இதைப் பண்டிதர்களுக்கே விட்டு விடுவோம். ஏனெனில், அவர்கள் அதற்கே பிறந்தவர்கள் நிற்க; வினா - விடை வினா: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம்கூட கிடைப்பதில்லை. ஆனால், பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்? விடை: நமது மதமும் ஜாதியும். வினா: நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100-க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம். ஆனால், பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன? விடை: மதமும் ஜாதியும் வினா: நமது பணக்காரக் குடும்பங்கள் வர வர பாப்பராய்க் கொண்டே வருவதற்குக் காரணமென்ன? விடை: வினையின் பயன். அதாவது, நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்கு பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜுகளாகவும் வந்து மேல்படி பார்ப்பனரல்லாதவர்களைப் பாப்பராக்குகிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்! வினா: எந்தவிதமான விபச்சாரக் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்? விடை: வெளியார்க்குத் தெரியும்படியாகச் செய்த விபச்சாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும். வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி? விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின்பேரால் குடிக்க வேண்டாம். வினா: மகமதியனாவதில் என்ன கெடுதி? விடை: ஒரு கெடுதியுமில்லை. ஆனால், பெண்களுக்கு மூடி போடாதே. வினா: உண்மையான கற்பு எது? விடை: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு. வினா: போலி கற்பு என்றால் எது? விடை: ஊரார்க்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனத்திற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலி கற்பு. வினா: மதம் என்றால் என்ன? விடை: இயற்கையுடன் போராடுவதும், அதைக் கட்டப்படுத்துவதும்தான் மதம். வினா: நாட்டுக்கோட்டையார் சமூகத்தில் உள்ள சுயமரியாதை என்ன? விடை: பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டுவது இல்லை என்பதாகும். வினா: தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு (லீவு) கொடுக்கப்படுகின்றது? விடை: பாடுபட்டு சம்பாதித்து மீதி வைத்ததை பாழாக்குவதற்காக. வினா: பெண்களை படிக்கக்கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? விடை: அவர்களுக்கு அறிவில்லை; ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக. வினா: மனிதனுக்கு கவலையும் பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? விடை: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும். வினா: பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்? விடை: தலை மயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும். வினா: பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? விடை: அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும் (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்). வினா: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? விடை: ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டிய அளவு கிடைத்து விடும். வினா: பெரிய மூடன் யார்? விடை: தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல், எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன். வினா: ஒழுக்கம் என்பது என்ன? விடை: ஒழுக்கம் என்பது தனக்கும், அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும். வினா: சமயக் கட்டுப்பாடு, சாதிக் கட்டுப்பாடு என்றால் என்ன? விடை: மனிதனை தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவதுதான் சாதி, சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது. வினா: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன? விடை: கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து அவரைக் காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது. வினா: இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது? விடை: இந்தியர்கள் 100-க்கு 90 பேர் கல்வி அறிவில்லாத - எழுத்து வாசனைகூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு, அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான். வினா: ஜனநாயக ஆட்சி என்றால் என்ன? விடை: தடி எடுத்தவன் தண்டல்காரனென்பதுதான் ஜனநாயக ஆட்சி. வினா: இந்தியாவுக்கு நல்ல ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? விடை: அதிகமாகப் பிள்ளை பெறுவதை நிறுத்தி, விதவைகளுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜனசங்கை பெருகும். வினா: இந்தியா சீர்பட என்ன வேண்டும்? விடை: இந்தியா சீர்பட்டு இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால், நாஸ்திகமும், நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும். வினா: இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன? விடை: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும் கடவுள்களுமேயாகும். வினா: கிருஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்? விடை: கிருஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப்பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமும் ஆகும். வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது? விடை: மத விஷயத்தில் அவர்களுக்குக் கிடைத்துள்ள உயர்ந்த நிலையால் அவர்கள் (பார்ப்பனர்கள்) எல்லோரையும் விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய் விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே, சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள். வினா: ஆண் விபசாரகர்கள் விபூதி பூசுவதன் மூலம் மோட்சத்திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் விபச்சாரத்திற்கு என்ன செய்வார்கள்? விடை: அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால், அங்கு இந்த விபூதி பக்தர்களுக்கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும், சமையல் செய்ய வேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால், காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்து விடும். வினா: பார்ப்பனர்களில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாய் இருக்கிறது? விடை: அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள்; படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது. வினா: பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்சத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன? விடை: கடவுள் இருக்கிறார்; போதாக்குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். சும்மா சொன்னேன் வினா: கடவுள் ஏன் காண முடியாதவராய் இருக்கிறார் தெரியுமோ? விடை: அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார் கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்குமென்றுதான். என்ன அக்கிரமம் என்றா கேட்கிறீர்கள். மூட்டை, கொசு இரண்டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போகாதா? கார்த்திகை தீபம் பாலர் பாலுக்கழ பட்டினியால் பலர் மடிய எத்திசையோரும் இகழும்படி வெண்ணெயும் நெய்யும் கொண்டு கல்லிலும் நெருப்பிலும் கொட்டும் கயமையே கார்த்திகை தீபமாகும். நமது மதமும், தெய்வமும், உற்சவமும், முட்டாள்தனமான தென்றும், அது செல்வத்தைப் பாழாக்குகின்றதென்றும், மக்களுக்கு யாதொரு பலனையுமளிக்கின்றதில்லை என்றும் சொல்லப்பட்டு வருவதற்கு உதாரணம், சமீபத்தில் திருவண்ணாமலையிலும், திருச்செங்கோடு முதலிய ஊர்களிலும் கார்த்திகை தீபம் (கூம்பு-சொக்கப் பனை) என்கின்ற உற்சவத்தின்போது குடம் குடமாய், டின் டின்னாய் நெய்யையும் வெண்ணெயையும் கொண்டு போய் நெருப்பில் கொட்டப் போகும் முட்டாள்தனமும், வீண் செலவும், அதனால் செல்வம் பாழாவதும் போதாதா என்று கேட்கின்றோம். இதற்கு பார்ப்பன - தேசியப் பத்திரிகைகள் என்ன சமாதானம் சொல்லப் போகின்றன என்பதைக் கவனிப்போம்.

- சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது, (குடிஅரசு 16.11.1930).
தமிழனுக்கு கடவுள் உண்டா?
Periyar Articles
குடிஅரசு
29.6.1930

உலகத்தில் மற்ற மதக்காரர்களுடைய கடவுளைப்பற்றிக் கவனித்துப் பார்த்தாலும், இவ்வளவு ஆபாசமாக இல்லா விட்டாலும், யுக்திக்கோ, வாதத்திற்கோ நிற்க முடியாமல் அவைகளுக்கு பெரிதும் பரிகசிக்கத்தக்கதாய்த் தானிருக்கின்றது. அதாவது, உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொருத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத் தானிருக்கின்றன. உதாரணமாக, இந்துமதத்தில் உலக சிருஷ்டிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் சொல்லுகிறபோது, கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி, அதன்மீது இருந்து கொண்டு அதில் ஒரு விதையைப் போட்டு. அந்த வித்திலிருந்து உலகத்தை உண்டாக்கி அவ்வுலகத்திலிருந்து பிர்மாவை சிருஷ்டித்து, அந்த பிர்மா அந்த உலகத்தை இரண்டாக்கி ஒன்றைச் சுவர்க்கமாகவும், மற்றொன்றை பூலோகமாகவும் செய்து, அந்த பூலோகத்தில் பஞ்ச பூதங்களையுண்டாக்கி, பிறகு மனிதர், மிருகம், பட்சி முதலிய ஜாதிகளை சிருஷ்டித்து என்று ஆரம்பித்து மற்றும் இவைபோல அடுக்கடுக்காக எப்படிச் சொல்லிக் கொண்டே போகின்றதோ, அதுபோலவே தான் கிறிஸ்து முதலிய இதர மதங்களிலும் கடவுள் முதல்நாள் ஒன்றை சிருஷ்டித்தார், மூன்றாவது நாள் வேறொன்றைச் சிருஷ்டித்தார் என்பதுபோலவே சொல்லிக் கொண்டு போகப்படுகின்றன.
ஆகவே, அஸ்திவாரத்தில் கடவுள் சிருஷ்டியைப்பற்றிச் சொல்லுகிற விஷயம் எல்லா மதத்திலும் ஒன்று போலவேதானிருக்கின்றன. இவை ஏன் இப்படியிருக்கின்றன என்று பார்ப்போமேயானால், கடவுள் உண்டு என்பதற்கு சமாதானம் சொல்லும் போது, உலக உற்பத்திக்கு ஒரு ஆதாரம் வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, அதற்காக கடவுள் உலகத்தை உண்டாக்கினார் என்று ஆரம்பித்து, அந்த உண்டாக்கப்பட்டவையென்பதை முதலில் இன்னதையுண்டாக்கினார் இன்னார் என்பதாகச் சில மதமும், முதல் நாள் இன்னதை யுண்டாக்கினார், இரண்டாவது நாள் இன்னதையுண்டாக்கினாரென்பதாகச் சில மதமும் சொல்லுகின்றன. ஆகவே, இந்த இடம் மாத்திரம் எல்லாம் ஒன்றுபோலாகவேதானிருக்கின்றன. இதில் ஏதாவது தகராறு ஏற்படுமானால் எல்லா மதக் கடவுளுக்கும் ஒரே கதிதான் நேரும். கடவுள் ஸ்தாபனத்திற்கு ஒரே மாதிரி அஸ்திவாரம் ஏற்படுவதற்குக் காரணமென்னவென்று பார்ப்போமானால், முதன் முதலாக ஆரிய மதத்திலிருந்து சீர்திருத்தமாக கிறிஸ்தவ மதமேற்பட்டதும், அதிலிருந்து சீர்திருத்தமாக மகம்மதிய மதமேற்பட்டதும் நமக்குக் காணப்படுகிறபடியால், எல்லா மதமும் அதையே பின்பற்றிக்கொண்டு வருவதாயிற்றே தவிர வேறில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமானால், "கடவுள்" என்கின்ற பதமே கட+உள் = (கடவுள்) என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர, வட மொழியிலும், ஆங்கில மொழியிலும் இருப்பது போன்ற பகவான் காட் (படின) அல்லா என்பது போன்ற ஒரு தனி வார்த்தையோ அல்லது அந்த விதங்களான அர்த்தத்தைக் கற்பிக்கக் கூடியதான வாக்கியமோ, தமிழில் இல்லையென்பதை உணர வேண்டும். தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் "கடவுள்" உணர்ச்சி இருந்து இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும். அது மாத்திரமல்லாமல், ஆங்கிலம் முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம், எத்தீஸ்ட், நாஸ்திகம், நாஸ்திகன் என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றனவோ அவைபோலவே தமிழிலும் கடவுள் இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கும், கடவுள் இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடுவதற்கும் அப்பொருள்கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும். ஆகவே, அவற்றிலிருந்து தமிழர்களுக்கும் (அதாவது தமிழ் நாட்டாருக்கும்) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்பந்தமுமிருந்ததில்லை என்பது ஒருவாறு புலப்படும். இறைவன் என்கின்ற பதத்தை கடவுளுக்கு உள்ள தமிழ்ப் பதம் என்று பண்டிதர்கள் சொல்லக் கூடுமானாலும் அது அரசனுக்கும், தலைவனுக்கும் ஏற்பட்டதே தவிர, கடவுளுக்காக ஏற்பட்ட தனிப் பொருளமைந்த சொல் அல்லவென்றே சொல்லுவோம். ஆனால், கடவுள் என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன், பெரியவன் எனினும் பொருந்தும் என்று சப்புக் கட்டலாமேயொழிய அது அதற்கே ஏற்பட்ட தனி வார்த்தை ஆகாது. நிற்க; தமிழ்நாட்டில் பலர் காலம்சென்ற பிதுர்க்களையும், செல்வாக்குள்ள பெரியார்களையும் அன்பினாலும், வீரர்களை கீர்த்தியாலும் வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். மற்றபடி இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிரமன், பிள்ளையார், சுப்பிரமணியன் முதலிய கடவுள்களையோ மற்றும் அது சம்பந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந்தார்கள் என்றாவது சொல்லுவதற்குக்கூட இடமில்லை என்று கருதுகிறேன். இதற்கெனக்குத் தோன்றும் ஆதாரம் என்னவென்றால், இப்போது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட நீச்சக் கடவுள்கள் தவிர மற்ற கடவுள்கள் பெயர்களெல்லாம் வடமொழியிலேயே இருக்கின்றதென்பதே போதுமானதாகும். ஆனால், வடமொழிப் பெயருள்ள சில கடவுள்களின் பெயர்களை தமிழில் மொழிபெயர்த்து அந்தக் கடவுள்களை தமிழில் அழைப்பதைப் பார்க்கின்றோம். என்றாலும், இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன் வருவதை நான் பார்க்கவில்லை. இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களைப் பிடித்த நோய்களான சைவ, வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வட மொழிப் பெயர்கள் உடையதாகவும், அவற்றின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேத சாஸ்திர புராண இதிகாசங்களாகவும்தானே இருக்கின்றதே அல்லாமல், தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்டதாகச் சொல்லக்கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும் கேட்டதும் இல்லை. இவற்றுக்கு செய்யப்படும் பூசை முதலியவையும், வடமொழி நூல்கள் ஆதாரப்படி, வடமொழிப் பெயர்கள் கொண்ட வஸ்துகளும் செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம். அதாவது அருச்சனை, அபிஷேகம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவையாகும். தவிரவும், மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும், பக்தர்மார்களும் கும்பிட்டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண்டகம், பிரபந்தம் முதலியவை பாடினதும், மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும், ஆகிய எல்லாம் வடமொழிப் பேர் கொண்ட கடவுள்களைப் பற்றியும், அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட வடமொழிப் புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றியுமே இருக்கின்றனவே அல்லாமல் மற்றபடி அவை தமிழர்களோ அல்லது தமிழ் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத்தக்கதாக ஒன்றையுமே, ஒருவர் வாக்கையுமே நான் பார்த்ததும் இல்லை; பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை. மற்றும், சமயக் குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர, தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம். வேண்டுமானால் அதை தமிழில் - விபூதியை திருநீறு என்றும், திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனாலும், அது சரியான மொழி பெயர்ப்பல்லவென்று சொல்வதோடு, விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படுகின்றனவோ அந்தக் கருத்தும், பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன். விபூதி என்றும், நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துகள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்தப் பெயரையே அதாவது, சாம்பலுக்குள்ள மாறு பெயராகிய நீறு என்றும், மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்றுகின்றது. ஆகவே, தமிழில் காட், அல்லா, பகவான் என்பவற்றைக் குறிப்பதற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும், அதன் சின்னங்களையும் குறிப்பிடுவதற்கு தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும், அனுபவத்திலுள்ள கடவுள்களும், பெயர்களும் அவற்றின் நடவடிக்கைகளும்கூட தமிழில் இல்லை என்பதும், மற்றபடி இப்போது இருப்பவை எல்லாம் வடமொழியில் இருந்து தமிழர்கள் எடுத்துக்கொண்டு தங்களுடையனவாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப் பட்டதை உங்களுக்குச் சொன்னேன்.

- கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜ ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களின் தலைமை முடிவுரை (குடிஅரசு, 29.6.1930).
விரதப்புரட்டு
Periyar Articles
குடிஅரசு 6.4.1930
உமாமகேஸ்வர பூஜை விரதம்

"நைமிசாரண்யவாசிகளுக்கு சூதபுராணிகர் சொன்னது" "ஆனந்த தேசத்தில் வேத விரதன் என்னும் பிராமணனுக்கு சாரதை என்று ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரில் மனைவியை இழந்த பத்மநாபன் என்னும் கிழப்பார்ப்பான் அந்தப் பெண்ணின் தகப்பனுக்கு நிறைய பணம் கொடுத்து, தனக்கு அந்தப் பெண்ணை இரண்டாவது பெண் ஜாதியாக விவாகம் செய்து கொண்டான். அந்தக் கிழப்பார்ப்பான் மணக்கோலம் முடியும் முன்பே விஷம் தீண்டி இறந்து போனான். பிறகு அந்தப் பெண் தகப்பன் வீட்டிலேயே இருந்தாள். சில நாள் பொறுத்து ஒரு முனிவர் சாரதையின் வீட்டிற்கு வந்தார். சாரதை அவருக்கு மரியாதை செய்தாள். உடனே அந்த முனிவர் சாரதையை "நீ புருஷனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்ல பிள்ளைகளைப் பெறக் கடவாய்" என்று ஆசீர்வாதம் செய்தார். அதற்கு சாரதை, "பூர்வஜென்ம கருமத்தின் பலனாய் நான் விதவையாகி விட்டதால் தங்களின் ஆசீர்வாதம் பலியாமல் வீணாய் போய்விட்டதே" என்றாள். அதற்கு அந்த ரிஷி, "நான் கண் தெரியாத குருடனானதால் அறியாமல் அந்தப்படி ஆசீர்வாதம் செய்ய நேரிட்டு விட்டது. ஆனாலும், அது பலிக்கும்படி செய்கிறேன் பார்" என்று சொன்னார். "என் புருஷன் இறந்து வெகுநாளாய் விட்டதே; இனி அது எப்படி பலிக்கும்?" என்று சாரதை கேட்க, அதற்கு அவர், நீ உமாமகேஸ்வர விரதம் அனுஷ்டித்து வந்தால் கண்டிப்பாய் நீ உத்தேசித்த காரியம் கைகூடும்" என்று கூறினார். "அவ்விரதம் அனுஷ்டிப்பதெப்படி?" என்று சாரதை கேட்டாள். அதற்கு முனி சொல்லுவதாவது:
"சித்திரை அல்லது மார்கழி மாதத்தில் ஒரு பிராமணனை அவன் மனைவியுடன் நல்ல பீடத்தில் உட்கார வைத்து அவர்களைப் பார்வதி பரமசிவனாகப் பாவித்து, மலர்களால் அர்ச்சித்து, தினமும் அன்ன ஆகாரமிட்டு வருஷக்கணக்காய் பூசை செய்து, பார்வதி பரமசிவ உருவத்தை மனதில் நினைத்து அதற்கு விரத அபிஷேகம் செய்து ஆராதித்து பஞ்சாட்சரத்தை தியானித்துக் கொண்டிருந்தால் நினைத்த காரியமெல்லாம் கைகூடும்" என்றார். அது கேட்ட சாரதையானவள் அந்தப்படியே அதுமுதல் தனக்கு முனிவரின் ஆசீர்வாதம் பலிக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு, முனிவர் சொன்னபடி உமாமகேஸ்வர விரதத்தை சிரமமாய் அனுஷ்டித்து வந்தாள். உடனே பார்வதி தேவி தாரதைக்கு பிரத்தியட்சமாகி "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டாள். சாரதை "எனக்கு புருஷன் வேண்டும்" என்றாள். பார்வதி, "அப்படியே உன்னை ஒருபுருஷன் தினமும் வந்து சொப்பனத்தில் புணருவான்; அதனால் நல்ல ஒரு குழந்தை பிறக்கும்" என்று வரம் கொடுத்தாள். அது முதல் சாரதையின் சொப்பனத்தில் தினமும் ஒரு புருஷன் வந்து புணர்ந்து கொண்டே இருந்தான். அதனால் சாரதைக்கு கர்ப்பமும் உண்டாயிற்று. அதைக் கண்ட அவ்வூரார் எல்லோரும், சாரதை சோரம் போய் கர்ப்பம் ஆய்விட்டாள் என்று பழித்தார்கள். இதைக் கண்டு சாரதை துக்கப்பட்டாள். பிறகு பழித்தவர்கள் வாய் அழுகி அதில் புழு உதிரும்படி பார்வதி செய்து விட்டாள். பத்து மாதம் பொறுத்து சாரதை ஒரு புத்திரனைப் பெற்றாள். அதற்கு சாரதேயன் என்று பெயர் சூட்டி, மகாமகிமை பொருந்திய சிவராத்திரியன்று தாயும் பிள்ளையும் கோகர்ணத்திற்கு யாத்திரை சென்றார்கள். செல்லும் வழியில், சொப்பனத்தில் வந்து புருஷன் நெரில் வந்து சாரதையுடன் கலந்து கொண்டான். பிறகு கொஞ்ச காலம் சாரதையும் புருஷனும் சந்தோஷமாய் வாழ்ந்து இன்பமனுபவித்து புருஷன் இறந்து போனான். புருஷன் இறந்ததும் உடனே சாரதை உடன்கட்டையேறி இருவரும் சிவபதமடைந்தார்கள்" என்று நைமிசாரண்யவாசிகளுக்கு சூதக முனிவர், வியாசரிடம் கேட்டு தெரிந்ததைச் சொல்லுகிறேன் என்று சொன்னார். இந்த சரிதை பிரமோத்திர புராணத்தில், உமாமகேஸ்வர விரத மகிமையும், பிரதத்தின் பலனும் என்கின்ற தலைப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை கவனிப்போம். இந்தக் கதையின் ஆகாசம் எவ்வளவு மோசமாயிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். ஒரு சிறு பெண்ணை ஒரு கிழவன் அந்தக் காலத்திலும் கட்டிக் கொள்ளுகின்ற வழக்கமும், தகப்பன் பணம் வாங்கிக் கொண்டு சாகப்போகும் கிழவனுக்கு தனது சிறு பெண்ணை கட்டிக் கொடுக்கும் வழக்கமும் பார்ப்பனர்களுக்குள் இருந்ததாக வைத்துக் கொண்டாலும், புருஷன் இறந்தவுடன் உடன்கட்டையேறாமல் பெண்ஜாதியான (சாரதை) சிறு பெண் இருந்திருக்க முடியுமா? என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு சமயம் உடன்கட்டை ஏறாமல் இருந்திருந்தாலும், ஒரு ரிஷிகள் இந்தப் பெண் விதவை என்ற சங்கதி தெரியாமல் போகுமா? ரிஷிக்கு ஒரு சமயம் அந்தப்படி தெரியாமல் போயிருந்தாலும், ஒரு குருட்டு ரிஷி தெரியாமல் சொல்லிவிட்ட காரியம், ஒரு விரதம் அனுஷ்டிப்பதால் கைகூடி விடுமா? அந்தப்படி கூடுமானாலும், பார்ப்பனனையும் அவன் பெண்ஜாதியையும் பார்வதி பரமசிவன் போல் எண்ணி பூசை செய்தால் பார்வதி வந்துவிடுவாளா? அப்படி வருவதாயிருந்தாலும், பார்வதி நேரில் புருஷனைக் கொடுக்காமல், தூக்கத்தின்போது கனவில் வந்து புணர்ந்து விட்டுப் போகும்படி கட்டுளையிடுவாளா? அப்படி கட்டளையிடுவதானாலும், கனவில் புணர்ந்ததற்கு கனவில் கர்ப்பமுண்டு பண்ணாமல், விழித்த பிறகுங்கூட அந்த கர்ப்பம் இருக்கும்படி செய்வாளா? அப்படித்தான் செய்தாலும், அதன் காரணத்தை பொது ஜனங்களுக்குத் தெரியப்படுத்தாமல் இரகசியமாய் இருக்கச் செய்து, இந்த இரகசியம் தெரியாத பொது ஜனங்கள் சாரதையின் கர்ப்பத்தைபற்றி சந்தேகப்பட்டால் அதற்கு பார்வதி திருப்தி அடையும்படி சமாதானம் சொல்லாமல் சந்தேகப்பட்டவர்கள் வாய் அழுகிப் புழு தள்ளும்படி செய்வது யோக்கியமாகுமா? அன்றியும், கோகர்ணத்திற்குப் புருஷனை வரும்படி செய்த பார்வதியும் பரமசிவனும், பொது ஜனங்கள் சந்தேகப்படும்போது வரும்படி செய்திருக்கப்படாதா? அன்றியும், அந்தப் புருஷனும் சாவானேன்? அப்படியே காலம் வந்து செத்து இருந்தாலும், முன்னைய கிழப்புருஷனுக்கு உடன்கட்டை ஏறாத குமரி சாரதை, இந்தப் புருஷனுக்கு ஏன் கிழவி ஆனபின் உடன்கட்டை ஏறினாள்? வாசகர்களே! வேதப்புரட்டு, இதிகாசப்புரட்டு, புராணப்புரட்டு என்பதுபோல் இந்த விரதப் புரட்டும் எவ்வளவு முட்டாள்தனமானதும் அயோக்கியத்தனமானதும் சுயநல சூழ்ச்சி கொண்டதுமாய் இருக்கின்றது என்பதை நன்றாய் கவனித்துப் பாருங்கள். விரதம் என்றால் ஒரு பார்ப்பனனையும், பார்ப்பனத்தியையும் பார்வதி பரமசிவன்போல் பாவித்து, அபிஷேகம் பூசை ஆராதனை செய்தால், விதவைகளுக்கு புருஷன் சொப்பனத்தில் வருவான் என்பது எவ்வளவு அயோக்கியத்தனமான கதை? இப்படித்தானே இப்போதுள்ள விதவைகள் புருஷ ஆசைக்கு விரதமிருந்து "சொப்பனத்தில்" புருஷருடன் புணர்ந்து கொண்டிருப்பார்கள். சாரதையைப் போல் அநேக விதவைகள் இப்போதும் கர்ப்பமானாலும், பழி சொல்லுகின்றவர்கள் வாயில் பார்வதி புழுக்கள் தள்ளச் செய்யாததால்தான் அந்த விரதமிருக்கும் விதவைகளெல்லாம் கர்ப்பங்களை தாங்களாகவே அழிந்து விடுகின்றார்கள் போலும். பார்ப்பன சூழ்ச்சி எவ்வளவு மோசமானது என்பதை இதிலிருந்தாவது விரதமிருக்கும் வைதீகர்களும், விரதமிருக்கும் பெண்களும், புருஷர்களும் அறிந்து கொள்ளுங்கள்.

சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது,("குடி அரசு", 6.4.1930).
கடவுள் சக்தி விதண்டாவாதம்
Periyar Articles
பகுத்தறிவு1.9.1935
நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது, நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம். ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும், மனதினால் நினைத்த அக்கிரமங்களையும் பார்த்தும் ஒன்றுகூட விடாமல் பதிய வைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக்கூறி, தண்டனை கண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவற்றில் கஷ்டப்படுத்தி வைக்கவும் முடியுமாம். நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது! அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறிஸ்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்த பிறகு, எல்லார் குற்றங் குறைகளையும் ஒன்றாய் பதிய வைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குழியிலிருந்து எழுப்பிக் கணக்குப் பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லி விடுமாம்.
இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது, சைவர்கள் கடவுள்களும், வைணவர்களுடைய கடவுள்களும், ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்தபின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவைப் பிடித்து வைத்து, அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து, அந்த சரீரத்திற்கு அதற்குத் தக்க தண்டனை கொடுக்குமாம். அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின்ன ஜந்துவாய் பிறந்து, இன்னின்ன பலன் அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாம். கிறிஸ்தவ சமயத்தில் உள்ள கடவுள் சக்திப்படி எல்லா மனிதனும் பாவம் செய்தேதான் தீருவானாம். அந்தப் பாவம் ஏது கிறிஸ்துமூலம்தான் மன்னிக்கப்படுமாம். மகம்மதிய மார்க்கப்படி மகம்மது நபிகள் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம். சைவ சமயப்படி சிவன் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம். அவருக்குத் தான் பரத்துவம் உண்டாம். வைணவ சமயப்படி விஷ்ணு மூலமாகத்தான் முடியுமாம். விஷ்ணுவுக்குத்தான் பரத்துவம் உண்டாம். ஆனால், சைவ, வைணவ சமயங்கள்படி மக்கள் பாவமே செய்வது மாத்திரமல்லாமல் புண்ணியமும் செய்யக் கூடுமாம். அதற்காக சொர்க்கம், வைகுண்டம், கைலாசம் என்கின்ற பதவிகள் உண்டாம். அப்புறம் ஒவ்வொரு மனிதனுக்கும், ஜன்மங்களும் உண்டாம். இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும், பார்ப்பானுக்கு அழுதால் மேற்கண்ட மோட்சங்களோ அல்லது நல்ல ஜன்மமோ எது வேண்டுமோ அது கிடைத்துவிடுமாம். ஆகவே, பொதுவாக கடவுள்களுடைய சக்திகள் அளவிட முடியாதது என்பதோடு, அறிந்துகொள்ள முடியாதது என்பது மாத்திரமல்லாமல், அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ சிந்திக்க முயற்சிப்பதோ மகாமகா பெரிய பெரிய பாவமாம். அதாவது, எந்தப் பாவத்தைச் செய்தாலும், எவ்வளவு பாவத்தைச் செய்தாலும், அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தமும், மன்னிப்பும் உண்டாம். ஆனால், கடவுளைப்பற்றியோ, அவரது சக்தியைப் பற்றியோ ஏதாவது, எவனாவது சந்தேகப் பட்டுவிட்டானோ பிடித்தது மீளாத சனியன். அவனுக்கு மன்னிப்பே கிடையாது. கிறிஸ்துநாதரைப் பிடித்தாலும் சரி, மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி, அல்லது சிவன், விஷ்ணு, மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி, ஒரு நாளும் அந்தக் குற்றம் (எந்தக் குற்றம்? கடவுளை சந்தேகிக்கப்பட்ட குற்றம்) மன்னிக்கப்படவே மாட்டாது. ஆனால், இந்த எல்லாக் கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும், அவருடைய அவதாரங்களுக்கும், கடவுளைப் பற்றியும், அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப் பற்றியும் மக்களை சந்தேகப்படாமல் இருக்கும்படிக்கோ, அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும்படிக்கோ செய்விக்க முடியாதாம். ஏனென்றால், அவ்வளவு நல்ல சாதுவான, சாந்தமான, கருணையுள்ள, சர்வ சக்தி பொருந்திய, சர்வியாபகமுள்ள கடவுள்களாம். பாவம், நாம் ஏன் அவற்றை தொந்தரவு செய்ய வேண்டும்? எல்லாம் கடவுள் செயல் என்று சும்மா இருந்துவிடுவோம்.

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை, (பகுத்தறிவு 1.9.1935).
கடவுள்
Periyar Articles
குடிஅரசு 28.7.1929, 11.8.1929
முதலாவது, மக்களுக்குக் கடவுள் எப்பொழுது, எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் தலைப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில், இப்போதுகூட மக்களுக்கு பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை. எப்படி எனில், சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ, வஸ்துவையோ காட்டி சாமி என்றும் அதைக் கைகூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை, சாமியையும் கும்பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனதிற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்க வேண்டும். அது எப்படி என்றும், எப்போதென்றும் பார்ப்போமானால், சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் நினைப்புத் தோன்றியிருக்க வேண்டும். கடவுள் என்பது - கடவுள், தெய்வம், அல்லா, காட் என்ற தமிழ், சமஸ்கிருதம், துலுக்கு, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தல் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும், அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால், அவ்வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூத கூட்டு என்று சொல்லப்படுமானால், அக்கூட்டின் சேர்க்கைக்கும், ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம்வல்ல ஆண்டவன் அல்லா, காட் என்று சொல்லப்படுகிறதென்று சொல்வதானாலும், அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனதிற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்கதாயிருக்கின்றது.
ஆகவே, அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும், அது நம் நாட்டைப் பொறுத்தவரை எப்படியிருந்தது என்பதாகவும் ,பார்க்க வேண்டுமானால், நம் நாட்டிலுள்ள கடவுள்களைக் கொண்டுதான் அதைத் தாராளமாக உணர முடியும். அதாவது, இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவையென்றால், பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மழை, இடி, மின்னல், மேகம், நோய்கள், அவை தீர்க்க வேண்டியவை முதலிய அதே விஷயங்கள் கடவுளாகக் கருதப்படுகின்றன. இவையெல்லாம் இவற்றின் உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக்கொள்ளப்பட்டவையே. அதிலும், இமயமலையே கைலையங்கிரியாகவும், அதுவும் வெள்ளி மலையாகவும், அங்கு கடவுள் இருப்பதாகவும், அங்கிருந்து வரும் நீர் அம்மலையிலுள்ள கடவுளின் தலையிலிருந்து வருவதாகவும் கருதப்பட்டு, இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டுபிடிக்க முடியாதிருந்ததும், மேல்நாட்டை மேல்லோகமென்றும், கீழ் நாட்டை பாதாள லோகம், நரகலோகமென்றும் இப்படிப் பலவாறாக கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்னவென்று பார்க்கும்போது அவற்றின் உண்மையை அறிய முடியாததாலேயே அவை கடவுளென்றும், அவற்றின் இயக்குதல் கடவுள் சக்தி என்றும் சொல்ல வேண்டிய அவசியம் தானாக ஏற்பட்டது. இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவற்றை போக முடியாதவைக்கே கடவுள் சக்தி என்று சொல்லி விடுகின்றான். உதாரணமாக, சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக்காரனுடைய செய்கையை மந்திரசக்தி என்றும், தெய்வ சக்தி என்றும், உபாசனா சக்தி என்றும், குட்டிச்சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள். அப்பையனாயிருந்து அப்படியே கருதியிருந்த நாம், இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல், தந்திரம், கைத்திறம் என்று சொல்லுகின்றோம். மற்றும் அந்த ஜால வேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ, தெய்வ சக்தி என்றோ சொல்லாமல், இது ஏதோ தந்திரம்தானே ஒழிய வேறில்லை; ஆனால், அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம். எனவே, ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும், தெய்வ சக்தியாகவும் தோன்றியது; பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால், அது அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சிப் பலனுமேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வசக்தி, கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்கு கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை. உதாரணமாக, சூரிய, சந்திர கிரகணம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத காலத்தில் நாம், அவற்றுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து, சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும், அது சூரியன் என்கின்ற கடவுளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி அச்சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து அத்தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம். இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும். இப்போது வான சாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன், இவற்றின் இயங்குதல், அதன் கால அளவு ஆகியவற்றைக் கண்டுபிடித்தபின், சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம். அதுபோலவே எங்கிருந்து, எப்படி தண்ணீர் வருகின்றதென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும், மேகக் கடவுளும், வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம் மனதில் மறையத் தொடங்கிவிட்டன. அதுபோலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார ஆராய்ச்சியும், உடற்கூறு ஆராய்ச்சியும் நமக்குத் தெரியத் தொடங்கிய பின்பு பேதி, மாரியம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவையும் மறைந்து வருகின்றன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமோனால், காரண காரியம் முதலிய விவரங்கள் கண்டுபிடிக்க முடியாதவையே கடவுள் செயல் என்றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம். இவையும், நாளுக்கு நாள் மனிதன் அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சியும் முதிர முதிர மறைந்து கொண்டேதான் வரும். மேலும் இப்போது ஒருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படும் காரியங்கள் மற்றொருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படாமலிருப்பதையும் பார்க்கிறோம். அது அவ் விருவருடைய அறிவு, ஆராய்ச்சி ஆகியவற்றின் வித்தியாசமே ஆகும். இப்போதும் நம் மனதிற்கு எட்டாத காரியங்களை மேனாட்டார் செய்யும்போது நாம் அதிசயப்பட்டாலும் அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியமாக வந்து விட்டோம் என்றாலும் நமக்கு பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும்வரை கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு விலக முடியாது அன்றியும், வாழ்க்கையில் பக்குவமடையாதவர்களுக்கு கடவுள் உணர்ச்சி இருந்தே தீர வேண்டியதாயும் இருக்கின்றது. அதாவது கடவுள் கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும், ஈடுசெய்ய முடியாத நஷ்டமடைந்தவனுக்கும், கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான் ஆறுதலையும், திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியதிருக்கின்றது. நல்ல அறிவும், ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்கு காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்ய முடியாத இடத்திலும், கடவுள் செயல் என்பதைக் கொண்டு தான் திருப்தி அடைகின்றார்கள். அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித் தீர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், உறுதியான பக்குவமடைந்தவர்கள் எந்த விசயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானம் அடைவதும், தெரியாததாய் இருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ, அல்லது இதுதான் இயற்கையென்றோ கருதி திருப்தி அடைவதுமாய் இருக்கின்றார்கள். எனவே, சாதாரண மக்கள் கடவுளுக்கும், சற்று அறிவு உடைய மக்கள் கடவுளுக்கும், ஆராய்ச்சிக்காரர்கள் கடவுளுக்கும், பக்குவமடைந்தவர்கள் எண்ணத்திற்கும் அநேக வித்தியாசமுண்டு. ஒருவருக்கொருவர் கடவுள் வணக்கத்திலும், கடவுள்மீது சுமத்தும் பொறுப்பிலும் அநேக வித்தியாசம் உண்டு. மனிதன், உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும் சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், உதாரணமாக, அவற்றிற்கு காரணகாரியம் தோன்றியபின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுவது சகஜம், இந்த முறையிலேயே கொஞ்ச காலத்திற்கு முன் அநேக விசயங்களைக் கடவுள் செயல் என்று எண்ணியிருந்த மக்கள், விஞ்ஞான (சைன்ஸ்) ஆராய்ச்சி ஏற்பட்டு பிறகு அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டு அநேக விசயங்களை மனிதன் செயல் என்று சொல்லத் தைரியம் கொண்டு விட்டார்கள். உதாரணமாக, கம்பியில்லாத் தந்தி விசயத்தை எடுத்துக் கொள்வோம். கம்பியில்லாத் தந்தி ஏற்படுத்தியிருக்கும் விசயமும் அது எப்படிச் செய்யப்படுவது என்கின்ற சைன்ஸ் உணர்ச்சியும் நமக்குத் தெரியாமல் இருக்குமானால் நாம் இன்னமும் அதை ஒரு தெய்வீக சக்தி என்றும், பழைய காலத்து ரிஷிகள் பேசிக் கொண்டிருந்ததாய் சொல்லப்படும் ஞான திருஷ்டி சம்பாஷணை என்றுமே சொல்லித் தீருவோம். ஆதலால், மக்களுக்கு அறிவும், ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அதுபோலவே அறிவும், ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டதாக வேண்டும். இப்போது பகுத்தறிவு குறைந்த மக்களிடமேதான் அநேகமாக தொட்டதற்கெல்லாம் கடவுளும், அவர்தம் செயல்களும் தாண்டவமாடுவதைப் பார்க்கின்றோம். அவர்கள் மேலேயே கடவுள் வருவதைக் கூடப் பார்க்கின்றோம். காட்டுமிராண்டி பக்குவமுடையவர்களிடமே அநேகமாக கடவுளைப் பற்றிய கதைகள் என்பவையும், புராணங்கள் என்பவையும் மதிப்புப் பெற்று இருப்பதையும் பார்க்கின்றோம். கொஞ்ச காலத்திற்கு முன் அக்கதைகளை அப்படியே அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள்கூட இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத் தன்மையை மறைத்துக் கொண்டு, சயன்ஸின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு கஷ்டப்படுகின்றார்கள். இதிலிருந்து என்ன ஏற்படுகின்றதென்றால், மக்கள் வரவர இப்போது சயின்சுக்கு பொருத்தமில்லாததை ஏற்க மறுக்கக் கூடிய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்குகின்றது. மழையை வரச் செய்வதும், செத்தவனை மறுபடியும் பிழைக்கச் செய்வதும், பேச்சுகளையும், நாட்டியங்களையும் எந்திரங்களில் பிடித்துக் காட்டுவதும் போன்ற காரியங்கள் மனிதனால் செய்யக்கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட பிறகு, மிக்க பாமர ஜனங்களுக்குக்கூட இவையெல்லாம் கடவுள் செயல் என்கின்ற குருட்டு நம்பிக்கை மறைந்து வருவதில் ஆச்சர்யமொன்றுமில்லை. எனவே, ஒரு காலத்தில் அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சிக் கவலையும் இல்லாதபோது ஏற்பட்ட கடவுள் சம்பந்தமான எண்ணங்கள் இனியும் இருந்துதான் தீர வேண்டுமா என்றால், எப்படியும் அது ஓர் அளவுக்காவது இருந்துதான் தீரும் என்று சொல்லுவோம். ஏனெனில், மனிதன் தான் எல்லாம் அறிந்தவன் என்கின்ற ஆணவத்தை உடையவனானதால் தன் புத்திக்கு எட்டாததை தனக்குத் தெரியவில்லை என்று கண்ணியமாய் ஒப்புக் கொள்ள சுலபத்தில் சம்மதிக்க இஷ்டப்பட மாட்டான். ஆகையால், அங்கு அதாவது தனக்கு அறிவு கட்டையாய்ப் போனபோது அவனுக்கு கடவுள் நம்பிக்கையும், கடவுள் செயலும் வந்து தான் தீரும். இதை மாற்றுவது சுலபமான காரியம் அல்ல. பூரண அறிவு வளர்ச்சி பெற்றால்தான் முடியும். அன்றியும், சிலர் உண்மை அறிந்திருந்தாலும் சுயநலமோ, மூடப் பிடிவாதமோ காரணமாக தங்களுக்கே புரியாதவற்றைப் பேசி பாமர மக்களை மயக்கிக் கொண்டும் இருப்பார்கள். ஏனெனில், மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாலேயே அவர்கள் பிழைக்கக் கூடியவர்களாய் இருப்பதால்தான். எது எப்படியிருந்த போதிலும் உலகத்தில் கடவுள் சம்பந்தமான குருட்டு நம்பிக்கைக்கு இருந்த மதிப்பு குறைந்துவிட்டதால் கடவுள் உணர்ச்சியும் எப்படியும் மக்களுக்கு வர வர குறைந்து கொண்டுதான் போகும் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக வருத்தப்படுவதிலோ, யார் மீதாவது குற்றம் சொல்வதிலோ பயனில்லை. ஆனால், அவ்வித குருட்டு நம்பிக்கையும் மூடப் பிடிவாதமும், ஒழிந்த காலத்தில்தான் உலகத்தில் ஒழுக்கமும் சமத்துவமும் நிலைபெறும் என்பது மாத்திரம் உறுதி.

- கடவுளும் மதமும் என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்(குடிஅரசு 28.7.1929, 11.8.1929).