Thursday, May 8, 2008

கடவுள்
Periyar Articles
குடிஅரசு 28.7.1929, 11.8.1929
முதலாவது, மக்களுக்குக் கடவுள் எப்பொழுது, எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் தலைப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில், இப்போதுகூட மக்களுக்கு பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை. எப்படி எனில், சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ, வஸ்துவையோ காட்டி சாமி என்றும் அதைக் கைகூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை, சாமியையும் கும்பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனதிற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்க வேண்டும். அது எப்படி என்றும், எப்போதென்றும் பார்ப்போமானால், சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் நினைப்புத் தோன்றியிருக்க வேண்டும். கடவுள் என்பது - கடவுள், தெய்வம், அல்லா, காட் என்ற தமிழ், சமஸ்கிருதம், துலுக்கு, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தல் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும், அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால், அவ்வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூத கூட்டு என்று சொல்லப்படுமானால், அக்கூட்டின் சேர்க்கைக்கும், ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம்வல்ல ஆண்டவன் அல்லா, காட் என்று சொல்லப்படுகிறதென்று சொல்வதானாலும், அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனதிற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்கதாயிருக்கின்றது.
ஆகவே, அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும், அது நம் நாட்டைப் பொறுத்தவரை எப்படியிருந்தது என்பதாகவும் ,பார்க்க வேண்டுமானால், நம் நாட்டிலுள்ள கடவுள்களைக் கொண்டுதான் அதைத் தாராளமாக உணர முடியும். அதாவது, இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவையென்றால், பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மழை, இடி, மின்னல், மேகம், நோய்கள், அவை தீர்க்க வேண்டியவை முதலிய அதே விஷயங்கள் கடவுளாகக் கருதப்படுகின்றன. இவையெல்லாம் இவற்றின் உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக்கொள்ளப்பட்டவையே. அதிலும், இமயமலையே கைலையங்கிரியாகவும், அதுவும் வெள்ளி மலையாகவும், அங்கு கடவுள் இருப்பதாகவும், அங்கிருந்து வரும் நீர் அம்மலையிலுள்ள கடவுளின் தலையிலிருந்து வருவதாகவும் கருதப்பட்டு, இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டுபிடிக்க முடியாதிருந்ததும், மேல்நாட்டை மேல்லோகமென்றும், கீழ் நாட்டை பாதாள லோகம், நரகலோகமென்றும் இப்படிப் பலவாறாக கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்னவென்று பார்க்கும்போது அவற்றின் உண்மையை அறிய முடியாததாலேயே அவை கடவுளென்றும், அவற்றின் இயக்குதல் கடவுள் சக்தி என்றும் சொல்ல வேண்டிய அவசியம் தானாக ஏற்பட்டது. இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவற்றை போக முடியாதவைக்கே கடவுள் சக்தி என்று சொல்லி விடுகின்றான். உதாரணமாக, சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக்காரனுடைய செய்கையை மந்திரசக்தி என்றும், தெய்வ சக்தி என்றும், உபாசனா சக்தி என்றும், குட்டிச்சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள். அப்பையனாயிருந்து அப்படியே கருதியிருந்த நாம், இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல், தந்திரம், கைத்திறம் என்று சொல்லுகின்றோம். மற்றும் அந்த ஜால வேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ, தெய்வ சக்தி என்றோ சொல்லாமல், இது ஏதோ தந்திரம்தானே ஒழிய வேறில்லை; ஆனால், அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம். எனவே, ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும், தெய்வ சக்தியாகவும் தோன்றியது; பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால், அது அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சிப் பலனுமேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வசக்தி, கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்கு கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை. உதாரணமாக, சூரிய, சந்திர கிரகணம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத காலத்தில் நாம், அவற்றுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து, சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும், அது சூரியன் என்கின்ற கடவுளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி அச்சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து அத்தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம். இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும். இப்போது வான சாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன், இவற்றின் இயங்குதல், அதன் கால அளவு ஆகியவற்றைக் கண்டுபிடித்தபின், சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம். அதுபோலவே எங்கிருந்து, எப்படி தண்ணீர் வருகின்றதென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும், மேகக் கடவுளும், வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம் மனதில் மறையத் தொடங்கிவிட்டன. அதுபோலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார ஆராய்ச்சியும், உடற்கூறு ஆராய்ச்சியும் நமக்குத் தெரியத் தொடங்கிய பின்பு பேதி, மாரியம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவையும் மறைந்து வருகின்றன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமோனால், காரண காரியம் முதலிய விவரங்கள் கண்டுபிடிக்க முடியாதவையே கடவுள் செயல் என்றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம். இவையும், நாளுக்கு நாள் மனிதன் அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சியும் முதிர முதிர மறைந்து கொண்டேதான் வரும். மேலும் இப்போது ஒருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படும் காரியங்கள் மற்றொருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படாமலிருப்பதையும் பார்க்கிறோம். அது அவ் விருவருடைய அறிவு, ஆராய்ச்சி ஆகியவற்றின் வித்தியாசமே ஆகும். இப்போதும் நம் மனதிற்கு எட்டாத காரியங்களை மேனாட்டார் செய்யும்போது நாம் அதிசயப்பட்டாலும் அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியமாக வந்து விட்டோம் என்றாலும் நமக்கு பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும்வரை கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு விலக முடியாது அன்றியும், வாழ்க்கையில் பக்குவமடையாதவர்களுக்கு கடவுள் உணர்ச்சி இருந்தே தீர வேண்டியதாயும் இருக்கின்றது. அதாவது கடவுள் கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும், ஈடுசெய்ய முடியாத நஷ்டமடைந்தவனுக்கும், கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான் ஆறுதலையும், திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியதிருக்கின்றது. நல்ல அறிவும், ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்கு காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்ய முடியாத இடத்திலும், கடவுள் செயல் என்பதைக் கொண்டு தான் திருப்தி அடைகின்றார்கள். அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித் தீர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், உறுதியான பக்குவமடைந்தவர்கள் எந்த விசயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானம் அடைவதும், தெரியாததாய் இருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ, அல்லது இதுதான் இயற்கையென்றோ கருதி திருப்தி அடைவதுமாய் இருக்கின்றார்கள். எனவே, சாதாரண மக்கள் கடவுளுக்கும், சற்று அறிவு உடைய மக்கள் கடவுளுக்கும், ஆராய்ச்சிக்காரர்கள் கடவுளுக்கும், பக்குவமடைந்தவர்கள் எண்ணத்திற்கும் அநேக வித்தியாசமுண்டு. ஒருவருக்கொருவர் கடவுள் வணக்கத்திலும், கடவுள்மீது சுமத்தும் பொறுப்பிலும் அநேக வித்தியாசம் உண்டு. மனிதன், உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும் சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், உதாரணமாக, அவற்றிற்கு காரணகாரியம் தோன்றியபின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுவது சகஜம், இந்த முறையிலேயே கொஞ்ச காலத்திற்கு முன் அநேக விசயங்களைக் கடவுள் செயல் என்று எண்ணியிருந்த மக்கள், விஞ்ஞான (சைன்ஸ்) ஆராய்ச்சி ஏற்பட்டு பிறகு அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டு அநேக விசயங்களை மனிதன் செயல் என்று சொல்லத் தைரியம் கொண்டு விட்டார்கள். உதாரணமாக, கம்பியில்லாத் தந்தி விசயத்தை எடுத்துக் கொள்வோம். கம்பியில்லாத் தந்தி ஏற்படுத்தியிருக்கும் விசயமும் அது எப்படிச் செய்யப்படுவது என்கின்ற சைன்ஸ் உணர்ச்சியும் நமக்குத் தெரியாமல் இருக்குமானால் நாம் இன்னமும் அதை ஒரு தெய்வீக சக்தி என்றும், பழைய காலத்து ரிஷிகள் பேசிக் கொண்டிருந்ததாய் சொல்லப்படும் ஞான திருஷ்டி சம்பாஷணை என்றுமே சொல்லித் தீருவோம். ஆதலால், மக்களுக்கு அறிவும், ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அதுபோலவே அறிவும், ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டதாக வேண்டும். இப்போது பகுத்தறிவு குறைந்த மக்களிடமேதான் அநேகமாக தொட்டதற்கெல்லாம் கடவுளும், அவர்தம் செயல்களும் தாண்டவமாடுவதைப் பார்க்கின்றோம். அவர்கள் மேலேயே கடவுள் வருவதைக் கூடப் பார்க்கின்றோம். காட்டுமிராண்டி பக்குவமுடையவர்களிடமே அநேகமாக கடவுளைப் பற்றிய கதைகள் என்பவையும், புராணங்கள் என்பவையும் மதிப்புப் பெற்று இருப்பதையும் பார்க்கின்றோம். கொஞ்ச காலத்திற்கு முன் அக்கதைகளை அப்படியே அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள்கூட இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத் தன்மையை மறைத்துக் கொண்டு, சயன்ஸின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு கஷ்டப்படுகின்றார்கள். இதிலிருந்து என்ன ஏற்படுகின்றதென்றால், மக்கள் வரவர இப்போது சயின்சுக்கு பொருத்தமில்லாததை ஏற்க மறுக்கக் கூடிய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்குகின்றது. மழையை வரச் செய்வதும், செத்தவனை மறுபடியும் பிழைக்கச் செய்வதும், பேச்சுகளையும், நாட்டியங்களையும் எந்திரங்களில் பிடித்துக் காட்டுவதும் போன்ற காரியங்கள் மனிதனால் செய்யக்கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட பிறகு, மிக்க பாமர ஜனங்களுக்குக்கூட இவையெல்லாம் கடவுள் செயல் என்கின்ற குருட்டு நம்பிக்கை மறைந்து வருவதில் ஆச்சர்யமொன்றுமில்லை. எனவே, ஒரு காலத்தில் அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சிக் கவலையும் இல்லாதபோது ஏற்பட்ட கடவுள் சம்பந்தமான எண்ணங்கள் இனியும் இருந்துதான் தீர வேண்டுமா என்றால், எப்படியும் அது ஓர் அளவுக்காவது இருந்துதான் தீரும் என்று சொல்லுவோம். ஏனெனில், மனிதன் தான் எல்லாம் அறிந்தவன் என்கின்ற ஆணவத்தை உடையவனானதால் தன் புத்திக்கு எட்டாததை தனக்குத் தெரியவில்லை என்று கண்ணியமாய் ஒப்புக் கொள்ள சுலபத்தில் சம்மதிக்க இஷ்டப்பட மாட்டான். ஆகையால், அங்கு அதாவது தனக்கு அறிவு கட்டையாய்ப் போனபோது அவனுக்கு கடவுள் நம்பிக்கையும், கடவுள் செயலும் வந்து தான் தீரும். இதை மாற்றுவது சுலபமான காரியம் அல்ல. பூரண அறிவு வளர்ச்சி பெற்றால்தான் முடியும். அன்றியும், சிலர் உண்மை அறிந்திருந்தாலும் சுயநலமோ, மூடப் பிடிவாதமோ காரணமாக தங்களுக்கே புரியாதவற்றைப் பேசி பாமர மக்களை மயக்கிக் கொண்டும் இருப்பார்கள். ஏனெனில், மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாலேயே அவர்கள் பிழைக்கக் கூடியவர்களாய் இருப்பதால்தான். எது எப்படியிருந்த போதிலும் உலகத்தில் கடவுள் சம்பந்தமான குருட்டு நம்பிக்கைக்கு இருந்த மதிப்பு குறைந்துவிட்டதால் கடவுள் உணர்ச்சியும் எப்படியும் மக்களுக்கு வர வர குறைந்து கொண்டுதான் போகும் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக வருத்தப்படுவதிலோ, யார் மீதாவது குற்றம் சொல்வதிலோ பயனில்லை. ஆனால், அவ்வித குருட்டு நம்பிக்கையும் மூடப் பிடிவாதமும், ஒழிந்த காலத்தில்தான் உலகத்தில் ஒழுக்கமும் சமத்துவமும் நிலைபெறும் என்பது மாத்திரம் உறுதி.

- கடவுளும் மதமும் என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்(குடிஅரசு 28.7.1929, 11.8.1929).

No comments: